/indian-express-tamil/media/media_files/2025/09/15/mdmk-split-2025-09-15-19-41-09.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 15, 2025 20:52 IST
2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும் - வைகோ பேச்சு
2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என திருச்சியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வைகோ கூறியுள்ளார்
- Sep 15, 2025 19:44 IST
மதிமுக மாநாட்டில் பேசிய துரைவைகோ
“கல்விக்கான நிதி, பேரிடர் நிவாரண நிதி, மெட்ரோ திட்ட நிதி என எதையும் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு முறையாக வழங்குவதில்லை” என திருச்சியில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் எம்.பி துரை வைகோ பேசியுள்ளார்.
- Sep 15, 2025 19:41 IST
மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருச்சியில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ (எம்.பி.) மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
- Sep 15, 2025 19:29 IST
அந்தியூரில் செங்கோட்டையன் இல்லாத அதிமுக கூட்டம்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில், அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதிய மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜ் தலைமையில் நடந்துவருகிறது; கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால், செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
- Sep 15, 2025 19:27 IST
கல் தூண் இடிந்து விழுந்து 4 வயது சிறுமி பலி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் பகுதியை சேர்ந்த கோபால்-அன்னலட்சுமி தம்பதியின் 4 வயது மகள் அஜிதா, தனது மாமா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, துணி காயவைக்கும் கயிற்றுடன் கட்டப்பட்டிருந்த ஒரு கல் தூண் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sep 15, 2025 19:06 IST
புதிய கட்சியை தொடங்கிய மல்லை சத்யா
மதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கினார். காஞ்சிபுரத்தில் கட்சிக் கொடி அறிமுகம். அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள, மதிமுகவில் இருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
- Sep 15, 2025 18:40 IST
பெண்கள் சாலை மறியல்
தேனி ஆண்டிபட்டி அருகே கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலிகுடங்களுடன் ஆண்டிப்பட்டி- வருசநாடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- Sep 15, 2025 18:09 IST
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க உத்தரவு
திருவண்ணாமலையில் 554 ஏக்கர் பரப்பை பாதுகாக்கப்பட்ட வன பகுதியாக அறிவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ள மலையில் இருக்கும் சட்டவிரோத கட்டிடங்களை அகற்றக்கோரிய வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக் குழு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
- Sep 15, 2025 18:06 IST
திருச்சியில் மதிமுக மாநாடு
திருச்சியில் மதிமுக மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் வைகோ மற்றும் துரை வைகோ பங்கேற்றுள்ளனர்.
- Sep 15, 2025 17:15 IST
ஆதினம் பேசியதை காவல்துறை அரசியல் நோக்கத்துடன் வழக்காக பதிவு செய்து பெரிது படுத்தியுள்ளது - நீதிபதி சதிஷ்குமார்
நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கும் நிலையில் ஆதினம் பேசியதை காவல்துறை அரசியல் நோக்கத்துடன் வழக்காக பதிவு செய்து பெரிது படுத்தியுள்ளது. ஆதினம் பேசிய விவகாரத்தை கண்டுக் கொள்ளாமல் விட்டிருந்தால் அப்படியே முடிந்திருக்கும் என இரு பிரிவிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக காவல்துறை தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதினம் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி சதிஷ்குமார் கூறியுள்ளார்
- Sep 15, 2025 17:09 IST
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 17,069 கன அடியாக குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 17,069 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 119.71 அடியாகவும், நீர் இருப்பு 93.010 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் மொத்தமாக விநாடிக்கு 15,800 கன அடியாக உள்ளது.
- Sep 15, 2025 16:59 IST
வி.ஏ.ஓ. சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்
கன்னியாகுமரி: பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக குழித்துறை வி.ஏ.ஓ. சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
- Sep 15, 2025 16:36 IST
எட்டு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி, திண்டுக்கல், செங்கல்பட்டு ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Sep 15, 2025 16:04 IST
ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடக்கும்போது டிஜிபி-யின் வழிகாட்டுதல்களை காவல்துறையினர் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலைகளில் போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், அவசரகால வாகனங்கள் தடையின்றிச் செல்வதை உறுதிசெய்ய முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
- Sep 15, 2025 15:54 IST
மதுரையில் எம்.பி கார்த்தி சிதம்பரம் பேட்டி
விஜய் கட்சிக்கென்று ஒரு ஆதரவு இருக்கிறது. எல்லாக் கட்சியிலும் உள்ள அவருடைய ரசிகர்கள், விஜயின் ஆதரவாளர்களாக மாறுவார்கள். அப்படி மாறும்போது எல்லாக் கட்சிகளுக்கும் சேதாரம் ஏற்படும். ஆனாலும் வரும் தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும்
- Sep 15, 2025 15:52 IST
காந்திராஜனை சிறைபிடித்த பொதுமக்கள்
திண்டுக்கல்: திருமாணிக்கனூருக்கு பூமி பூஜை நிகழ்ச்சிக்கு சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜனை சிறைபிடித்து அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? என ஒரு மணி நேரத்துக்கும் மேல் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
- Sep 15, 2025 15:27 IST
நீலகிரி மாவட்ட ஆட்சியர் பேட்டி
நீலகிரி: சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள 35க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகளை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், யானைகள் வழித்தடம் குறித்து டிஜிட்டல் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தனியார் நிலங்கள் குறித்த சில குழப்பங்கள் இருப்பதால் அது சரிசெய்யப்பட்டு, வழித்தடம் தொடர்பான முழு வரைபடம் வெளியிடப்படும்.
மாவட்ட ஆட்சியர் பேட்டி
- Sep 15, 2025 14:56 IST
விவசாய நிலங்களை நிபந்தனை பட்டாவாக மற்ற எதிர்ப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் விவசாய நிலங்களை நிபந்தனை பட்டாவாக மற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாய நிலங்களை நிபந்தனை பட்டாவாக மாற்றி நிலத்தை ஜீரோ மதிப்பு ஆக்கியதை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரை சந்திக்கச் சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். விவசாயிகளிடம் சார் ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ வெங்கடாசலம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. நிபந்தனை பட்டாவை நீக்க உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- Sep 15, 2025 14:37 IST
அஜித் குமார் மரண வழக்கு - மடப்புரத்தில் சி.பி.ஐ விசாரணை
மடப்புரம் பகுதியில் நிகிதா கொடுத்த நகை திருட்டு வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜூன் 28-ஆம் தேதி தனிப்படை போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் உயிரிழந்தார். அஜித்குமார் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வரும் நிலையில், நிகிதா நகை திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, மூன்று பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் தற்போது மடப்புரத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Sep 15, 2025 14:35 IST
சட்டவிரோத மது விற்பனை - 3 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 144 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- Sep 15, 2025 13:42 IST
இன்றைய வானிலை அப்டேட்!
திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
- Sep 15, 2025 13:01 IST
குடிநீர் வசதி இல்லாததால் அவதி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் அடிப்படை தேவையான குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் அவதியடைந்தனர். ரூ. 30 வரை செலவழித்து தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டியிருப்பதாக வேதனை தெரிவித்தனர்.
- Sep 15, 2025 12:55 IST
எஸ்.எஸ்.ஐ ரங்கராஜ் பணியிடை நீக்கம்
நீலகிரி கூடலூர் அருகே உள்ள தேவாலா காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ ரங்கராஜ், கடந்த 7-ம் தேதி நாடுகாணி சோதனை சாவடி வழியே சென்ற லாரிகளின் ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இதையடுத்து, ரங்கராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
- Sep 15, 2025 12:08 IST
திண்டுக்கல்லில் அமைச்சர் பெரியசாமி செய்தியாளர் சந்திப்பு
விஜயை பற்றி எங்களுக்கு கவலையே இல்ல; பொழுதுபோக்குக்காகதான் அவரை பார்க்க மக்கள் செல்கின்றனர். சொல்லப்படாத எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன தெரியுமா? சொல்வதையும் செய்து, சொல்லாததையும் செய்யும் அரிய முதல்வர் நம் முதல்வர் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
- Sep 15, 2025 11:23 IST
திருச்சியில் 10 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தவர்கள் வடமாநில கும்பல்
திருச்சியில் 10 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தவர்கள் வடமாநில கும்பல் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்தபோது வடமாநில கார் எண் இருந்ததாகவும், இந்தியில் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- Sep 15, 2025 11:01 IST
கோவையில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற ராம லஷ்மணன், வீரபாபு ஆகியோர் போலீசார் கைது செய்தனர். கோவையில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டனர்.
- Sep 15, 2025 10:37 IST
கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரி இன்று முதல் மூடல்
கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. யானைகள் நடமாட்டத்தால் பாதுகாப்பு கருதி பேரிஜம் ஏரி இன்று முதல் மூடப்படுகிறது.
- Sep 15, 2025 10:24 IST
தண்டவாளத்தில் குழந்தை உடல் - நரபலியா?
கோவை, இருகூர் ரயில் தண்டவாளத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுப்பு. குழந்தையின் உடல் அருகே மஞ்சள், குங்குமம், வெட்டப்பட்ட கோழி இருந்ததால் நரபலியா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sep 15, 2025 09:49 IST
தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன்: செங்கோட்டையன் பேட்டி
பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எம்.ஜ்.ஆர் உருவாக்கினார். ஜெயலலிதா அதனை கட்டி காத்து வளர்த்தார். அதிமுக ஒன்றினையும் விவாகரத்தில் தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன். புரியவேண்டியவர்களுக்கு புரியும் என்று கோபியில் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், அண்ணாவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதிமுக 2026 தேர்தலில் வெற்றி பெற எல்லாரும் உறுதுணையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- Sep 15, 2025 08:06 IST
நாளை 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் செப்.17ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.