மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார்.
வரவிருக்கும் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும். அருதிப் பெரும்பான்மை, தனிப் பெரும்பான்மை பெறும், கூட்டணி அரசுக்கு வந்து வேலை இருக்காது" என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார். தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும், அனைவரும் உறுதியாக இருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய தி.மு.க. அரசின் செயல்பாடுகள் குறித்து வைகோ திருப்தி தெரிவித்தார். "நாங்கள் இதுவரை இந்த அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமோ, அறிக்கையோ நடத்தியது இல்லை. சிறப்பாக அவர்கள் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் திட்டமிடப்படாத அருமையான திட்டங்களை கூட அறிவித்துக் கொண்டு அதை நடத்தி வைத்துக் கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். மகளிருக்கு இலவச பேருந்து, மாதம் ஆயிரம் ரூபாய் என, மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், வேலையில்லாதவர்கள் என பல திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். ஆகவே இந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்" என்று அவர் புகழ்ந்தார். கலைஞர் கருணாநிதிக்கு தான் பக்கபலமாக இருந்தது போல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்ற தனது உறுதிமொழியையும் அவர் நினைவுபடுத்தினார்.
காவல்துறை அராஜகத்திற்கு வைகோவின் கடும் கண்டனம்
மதுரை திருப்புவனம் அருகே அஜய் குமார் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார். "அந்த பையனையும் அவனுடைய தம்பியையும், அழைத்துக் கொண்டு போய் அந்த காவல் துறையினர் அடித்து உதைத்து சித்திரவதை செய்து, கொலை செய்ய என்னெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து விட்டனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. இந்த விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருடைய மேற்பார்வையில் நடக்க வேண்டும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடத்த வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். சாத்தான்குளம் சம்பவத்தையும் சுட்டிக்காட்டி, காவல் நிலையங்களில் சித்திரவதையும், மரணமும் இனிமேல் நடக்கக் கூடாது என்றும், அந்த பொறுப்பை காவல் துறையின் உயர் அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.
மதிமுகவின் தியாகங்களும் கொள்கை உறுதியும்
கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தது குறித்த கேள்விக்கு, "உண்மையான தொண்டர்கள் எங்களுடைய இயக்கத்தை பாதுகாக்கிறார்கள். பதவி உயர்வை பெற்றவர்கள் சுய நலத்திற்காக விலகிச் சென்று இருக்கக் கூடும்" என்று பதிலளித்தார். ஸ்டெர்லைட் போராட்டம், நியூட்ரினோ திட்டம், என்.எல்.சி. பிரச்சனை, ஈழத் தமிழர்களுக்கான உதவிகள் என மதிமுக ஆற்றிய சேவைகளை அவர் பட்டியலிட்டார். வாஜ்பாய் மற்றும் அத்வானி வற்புறுத்தியும் அமைச்சர் பதவியை தான் ஏற்க மறுத்ததையும், தனது ஒரே லட்சியம் திராவிட இயக்கத்தை பாதுகாப்பதுதான் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் மொழிப் பாதுகாப்பு
இந்தி திணிப்பு குறித்து தனது கடுமையான நிலைப்பாட்டை வைகோ மீண்டும் வலியுறுத்தினார். "இந்துத்துவா சக்திகள், சனாதன சக்திகள் தமிழகத்தை முட்டுப்போட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றை உள்ளே நுழைய விடக் கூடாது என்பதை நான் பாராளுமன்றத்திலேயே பேசினேன். உங்கள் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முடியாது என பேசினேன்" என்று கூறினார். ஆர்.எஸ்.எஸ். தீர்மானங்களையும், இந்தி திணிப்புக்கு எதிராகப் பல மாநிலங்கள் எழுந்துள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், அண்ணா கொண்டு வந்த மொழி கொள்கைதான் தமிழக இளைஞர்களின் உலகளாவிய வளர்ச்சிக்குக் காரணம் என்று பெருமிதம் தெரிவித்தார்.
ரயில் கட்டண உயர்வு கண்டனம்
ரயில் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு, "ரயில் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது. மக்கள் ஏற்கனவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் மக்கள் தலையில் மேலும் பாரத்தை வைப்பது போல, கட்டணத்தை உயர்த்தி இருப்பதை தவிர்க்க வேண்டும். அந்த முடிவை கைவிட வேண்டும். அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்" என்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.