/indian-express-tamil/media/media_files/2025/08/25/whatsapp-image-2025-2025-08-25-10-00-22.jpeg)
Coimbatore
கோயம்புத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென் கைலாயம் என்று போற்றப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில், வனப்பகுதியுடன் இணைந்துள்ளது. இதனால், வனவிலங்குகளின் நடமாட்டம் இங்கு புதியதல்ல.
சமீப காலமாக, ஒரு ஒற்றை காட்டு யானை அடிக்கடி வனத்திற்குள் இருந்து கோவில் வளாகத்திற்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டுவிட்டு, அது மீண்டும் வனத்திற்குள் சென்றுவிடுகிறது. இது கோவில் பணியாளர்களுக்கும், பக்தர்களுக்கும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
நேற்றைய தினம், இந்த ஒற்றைக் காட்டு யானை வழக்கத்திற்கு மாறாக, கோவிலின் அலுவலகத்தை முற்றுகையிட்டது. திடீரென யானை அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு அருகே நிற்பதைக் கண்ட பணியாளர்களும், பக்தர்களும் திகைத்து நின்றனர். அச்சத்தால் சிலர் ஓடி ஒளிய, சிலர் தைரியமாக யானையை விரட்ட முயற்சி செய்தனர்.
"இறங்கி வா சாமி... அங்க ஒன்னும் இல்லை... போ... போ..." என்று கோவில் பணியாளர்களும், பக்தர்களும் சத்தம் போட்டு யானையை விரட்டினர். மக்களின் குரலுக்கு செவிசாய்த்தது போல, அந்த யானையும் மெதுவாக அங்கிருந்து கீழே இறங்கிச் சென்றது. இந்த முழு சம்பவத்தையும் சிலர் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.
தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவிலில் உள்ள பக்தர்களும், பணியாளர்களும் ஒரு காட்டு யானையுடன் உரையாடுவது போன்ற காட்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சம்பவம், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான எல்லைகள் மெல்ல மெல்ல மங்கி வருவதை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.