கோயம்புத்தூர் விழா 2023 அனைவருக்குமான நிகழ்வுகளுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கலை தெரு (Art street) நிகழ்வு இந்தாண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட பகுதிகளில் உள்ள பல கலைஞர்கள் தங்களது படைப்பை காட்சிப்படுத்தியுள்ளனர். 80 கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கலைத் தெரு நிகழ்வை மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார். ரேஸ் கோர்ஸ் வாக்கிங் சர்க்கிள், கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் கிளப் பகுதியில் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 1500-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் தங்கள் கனவு வாழ்க்கை பற்றி ஓவியங்களை அஞ்சல் அட்டையில் வரைந்து காட்சிபடுத்தியுள்ளனர்.

கிராமப்புறங்களை சேர்ந்த 16 அரசுப் பள்ளிகளின் 700 மாணவ, மாணவியரின் ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் படைப்புகளுக்கு ‘கனவுகளின் வானவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தெய்வீக மற்றும் புராண உருவங்களின் கேரள சுவரோவியங்கள், கண்ணாடி கலை ஓவியங்கள் போன்ற பல்வேறு வகையான கலைகள், கிரியேட்டிவ் கேலிகிராபி, 3-டி மோல்ட்ஸ், பொன்னியின் செல்வன் நாவல், படத்தால் ஈர்க்கப்பட்ட வரலாற்று ஓவியங்கள், குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்களின் உருவப்படங்கள் போன்ற ஏராளமான படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

கற்பகம் அகாடமி, ரங்கநாதன் கட்டடக்கலை கல்லூரி மற்றும் ரத்தினம் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் ஆகிய 3 கல்லூரிகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன. பொதுமக்கள், இளைஞர்கள் ஏராளனமானோர் கலை படைப்புகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/