கோவையை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் அரசு பள்ளியில் பயிலும் ஆதரவற்ற பெண் குழந்தைகளை சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்று நெகிழ வைத்துள்ளனர். கோவையில் இருந்து ஒரு நாள் சுற்றுலாவாக சென்னைக்கு ஆதரவற்ற குழந்தைகளை விமானத்தில் அழைத்து வந்து புதிய அனுபவத்தை தன்னார்வ அமைப்பினர் வழங்கியுள்ளனர்.
அதன்படி கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்த பெண் குழந்தைகளை தேர்வு செய்து, இந்த விமான பயண அனுபவத்தை வழங்கியுள்ளனர். இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 15 மாணவிகள் சென்னைக்கு விமானம் மூலம் ஒரு நாள் சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டனர். அதன்படி காலை விமான நிலையம் வந்த குழந்தைகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது தெரியவந்ததாகவும் அத்தகைய குழந்தைகளின் கனவை நனவாக்க இந்த சேவையை 3 வருடமாக செய்து வருவதாகவும் தன்னார்வ அமைப்பு தெரிவித்தது.
கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள வணிக வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, விளையாட்டு, ஷாப்பிங் போன்ற புதிய அனுபவங்களை வழங்கி உணவு வழங்கி மீண்டும் மாலை சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்திலேயே அழைத்து வர உள்ளதாக தன்னார்வ அமைப்பினர் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“