கோவையில் பொதுமக்களிடையே தலைக்காயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ராயல்கேர் மருத்துவமனை சார்பாக வாக்கத்தான் (Walkathon) நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மருத்துவர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணன், "பெரும்பாலான தலைக்காயங்கள் சாலை விபத்துகளாலேயே ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உலக அளவில் ஆண்டுதோறும் 10 முதல் 12 சதவீத மக்கள் தலையில் காயம் ஏற்படுவதால் உயிரிழக்கின்றனர்.
Advertisment
அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்றபடி பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துக்களை தவிர்க்க இயலும். கோவை மாநகரை பொறுத்தவரை போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு புதிய முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது"என்றார்.
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் துவங்கிய வாக்கத்தான் பிரதான சாலை வழியாக நஞ்சப்பா சாலை ரயல்கேர் மருத்துவமனையில் நிறைவடைந்தது.