Coimbatore weatherman Santhosh Krishnan chases monsoon : தமிழகத்தில் மழை என்றால் சூடான பஜ்ஜியும், இளையராஜாவும் ஞாபகத்திற்கு வருகின்றார்களோ இல்லையோ முதலில் ரமணன் தான் அனைவருக்கும் நினைவில் வருவார். அவரை தற்போது மிஸ் செய்யாதவர்கள் என்று ஒருவரும் இருந்துவிட முடியாது. அவருடைய இடத்தை தற்போது பூர்த்தி செய்து வருகிறார் தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான். முழுமையான தமிழ்நாட்டுக்கும் அவருடைய வானிலை அறிக்கை இருக்கும். சில நேரங்களில் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் சமயங்களில் வானிலை அறிக்கையை தருவார். அவரைப் போன்றே ஒருவர் கோவையில் விவசாயிகளுக்காக வானிலை அறிக்கையை வெளியிட்டு வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்தது.
யாராக இருக்கும், ரொம்ப பெரியவர், வயதானவராக இருக்க கூடும். விவசாயம் சார்ந்தும், மழை சார்ந்தும் 3 வருடங்களுக்கும் மேலாக விவசாயிகளுக்கு ஒருவர் உதவுகிறார் என்று யாராவது கூறினால் அப்படி தானே தோன்றும். ஆனால் நம்மிடம் பேசியதோ எஞ்சினியரிங் முடித்தை கையோடு ஐ.டி. சென்று அதுவும் பிடிக்காமல் தற்போது விவசாயம் பார்த்து வரும் ஒரு இளைஞர்.
சந்தோஷ் கிருஷ்ணன் கோவை மாவட்டம் அத்தப்பகவுண்டன் புதூரில் வசித்து வருகிறார். கணினி அறிவியலில் பட்டம் பெற்றிருந்தாலும், தன்னுடைய தாத்தா தனக்கு கூறிய வானிலை மாற்றங்கள் தொடர்பான நுணுக்கத்தினை பயன்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக வானிலை அறிக்கையையும், அது தொடர்பான புதிய புதிய அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறார். ஏழு எட்டு வருடங்களாகவே இவர் இதில் ஆர்வம் காட்டி வந்தாலும், மிக சமீபமாகவே இவர் முகநூலில் கொங்கு வெதர்மேன் (Kongu weatherman) என்ற பெயரில் பக்கம் ஒன்றை துவங்கி தினசரி தகவல்களாக வானிலை ஆய்வு சம்பந்தமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
கோவை, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, மற்றும் கரூர் மாவட்ட மக்களுக்காக தற்போது வானிலை அறிக்கைகளை தயாரித்து சொந்த முயற்சியில் வெளியிட்டு வருகிறார்.
Climate Change : இதில் எப்படி விருப்பம் வந்தது?
என் தாத்தா இந்த பகுதியில் விவசாயம் செய்து வந்தார். அவருக்கு மழை எப்போது பெய்யும் என்பது துவங்கி அனைத்தையும் துல்லியமாக கணித்து கூறிவிடுவார். எனக்கும் அவருடைய அறிவை பகிர்ந்து கொள்ள சிறு வயதில் இருந்தே மழை மீதும், விவசாயம் மீதும், பருவநிலைகள் மீதும் ஒரு அலாதியான விருப்பம் வந்தது. பிறகு இணையத்தில் கியா வெதர் ப்ளாக்கில் (Kea weather Blog) நிறைய கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். தமிழகம் மற்றும் இந்தியாவில் இருக்கும் பல்வேறு வானிலை ஆராய்ச்சியாளர்களுடான என் நட்பு வட்டம் விரிவடைய துவங்கியது. தெரிந்தவர்களுக்கு மட்டும் வானிலை அறிக்கை கூறி வந்தேன். பின்பு 2017 ஆரம்பத்தில் கொங்கு வெதர்மேன் என்ற பேஜை தொடங்கி தொடர்ந்து வானிலை மாற்றம் குறித்தும் புயல்கள் குறித்தும் அப்டேட்கள் தர துவங்கினேன். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இவருடைய முகநூல் பதிவுகளை பார்த்து வானிலை அறிக்கையை அறிந்து கொள்ள : Coimbatore Weatherman
2019 Monsoon delay : இந்த வருடம் பருவ மழை தாமதமாக பெய்ய காரணம் என்ன?
ஏற்கனவே வானிலை ஆராய்ச்சியாளர்கள் இந்த வருடம் இது போன்ற ஒரு வறட்சி நிலவும் என்று வெகு நாட்களுக்கு முன்பிருந்தே எச்சரிக்கை செய்து வந்தோம். அதனால் தான் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் கிடைத்த மழையை ஓரளவிற்கு சேமித்து வைத்துக் கொண்டு இந்த கோடை கால வறட்சியை சமாளித்தோம். காடுகள் அழிப்பு, புவி வெப்பமயமாதல் என்று பல்வேறு தீய நிகழ்வுகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அதனை தடுப்பதற்கான நிகழ்வுகளோ ரயில் பூச்சி போன்று மெதுவாக ஊர்ந்து செல்கிறது. இது போன்ற நிலை தொடர்ந்து நீடிக்குமே ஆனால் இனி வறட்சியின் பிடியில் இருந்து தமிழகம் தப்பிப்பதற்கே வழியில்லை.
கேரள மழைக்கும் தமிழக மழைக்கும் இருக்கும் வித்தியாசம்?
கேரளாவில் மழை பெய்ய துவங்கினால் அது ஒரே சீராக மாநிலம் முழுவதும் பெய்யத் துவங்குகிறது. அதற்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் ஒரு உதராணம். ஆனால் தமிழகம் அப்படியில்லை. அதன் புவி அமைப்பு ஒரு மாதிரியாக உள்ளது. நகர் மயமாக்கலால் தமிழகத்தின் குறிப்பிட்ட சில இடங்கள் அதிக வெப்பத்திற்கும் வெப்பச்சலனத்திற்கும் உள்ளாகிறது. மழை உருவாகும் போதோ, புயல் காற்று உருவாகும் போது அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் மட்டும் அதிக அளவு மழை பெய்துவிட்டு சென்றுவிடுகிறது. அதைத் தாண்டி நகரும் பட்சத்தில், நகரங்களில் இருக்கும் தூசி, மாசு போன்ற நகரத்தின் மிச்ச மீதிகளை தான் காற்று கடத்துகிறதே தவிர மழை தமிழகம் முழுவதும் தீவிரமாக / ஒரே சீராக பருவமழை நகர்வதில்லை.
Rain water harvesting : மழை நீர் சேகரிப்பு முறை பற்றிய விழிப்புணர்வு…
இன்றைய சூழலில் எத்தனை அரசு அலுவலகங்களில் முறையாக மழைநீர் சேகரிப்பு முறைகள் இயங்கி வருகின்றன. ஒரு நகரை உருவாக்கும் போது முறையான ஆலோசனைகளைப் பெற்று, இந்த நகரத்திற்கு தேவையான அனைத்தையும் ஒருங்கே முறையாக வடிவமைத்த பின்னர், இயற்கைக்கு பேரிழிப்பு ஏற்படாமல் ஒரு நகரம் கட்டியமைக்கப்பட்டால் இது போன்ற பிரச்சனை ஏற்பட வாய்ப்புகளே இல்லை. மக்கள் தொகை அடர்த்தி, தொலை நோக்கு பார்வை இல்லாமல் கட்டமைக்கப்பட்ட நகரங்கள், மக்களின் தேவைகளுக்காக தொலைக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் இப்படியான சூழலில் திடீரென மீண்டும் மழை நீர் சேகரிப்பு என்பதை கொண்டு வந்தால் என்ன ஆகும்.
மக்கள் அதற்கான வழியை எப்படி தேர்வு செய்வார்கள் என்பதெல்லாம் கேள்விக்குறி தான். புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டாயமாக மழை நீர் சேகரிப்புடன் கூடிய வீடுகளை கட்ட வேண்டும் என்பதை சட்டப்பூர்வம் ஆக்க வேண்டும். கிராமப்புறங்களில் இதனை மீட்டெடுப்பது மிகவும் எளிது. நகர்புறங்களில் கொஞ்சம் சீறிய முயற்சிகள் தேவை. ஒரு அளவுக்கு மேல் எங்களாலும் மக்களை ஃபோர்ஸ் செய்து ஒரு வேலையை வெற்றிகரமாக செய்து வைத்திட இயலுவதில்லை.
மக்கள் தானாக முன்வந்து நீர் நிலைகளை பாதுகாக்க முனைய வேண்டும். அப்போது தான் நீர்நிலைகளை சுத்தமாகவும், எதிர்வரும் சந்ததியினருக்கு பயனுடையதாகவும் நம்மால் விட்டுச் செல்ல இயலும் என்றும் கூறினார் சந்தோஷ்.
கோவை மற்றும் கொங்கு பெல்ட் எப்படி இந்த கோடை காலத்தை சமாளித்தது?
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையும், கேரளா வெள்ளமும், இங்கிருக்கும் நிறைய அணைகளை நிரப்பிவிட்டுச் சென்றது. அதன் காரணமாகவே இங்கு நாங்கள் ஒருவாராக சமாளித்து வருகின்றோம். ஆனால் இந்த ஆண்டில் பருவமழை தாமதமாகவே பெய்யத் துவங்கியது. மேலும் வாயு புயலின் காரணமாக மேலும் ஒரு தாமதம். இதனால் இந்த பகுதியில் வழக்கத்திற்கும் குறைவாகவே பருவமழை இதுவரை பொழிந்துள்ளது. இந்த மழையால் எவ்வளவு அணைகள் நிரம்பும் என்று தெரியவில்லை. வருகின்ற மூன்று வாரங்கள் தான் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு மிகவும் க்ரூசியலான வாரங்கள். தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு மேல் தன்னுடைய தீவிரத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளும். இந்த கால கட்டத்தில் மழையை சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே கோவை அடுத்த வருட கோடையின் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்கும். வடகிழக்கு பருவமழை இந்த பகுதியல் பெரிய அளவு ஹோப்பை தருவதில்லை என்றார் சந்தோஷ். இந்த வாரங்களை நம்பி தான் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்க்கை இருக்கிறது.
சந்தோஷ் கிருஷ்ணன் குறித்து :
சந்தோஷ் கிருஷ்ணன் கோவை அத்தப்பகவுண்டன்புதூரை பூர்வீகமாக கொண்டவர். இளம்நிலை பொறியியல் படிப்பை கோவை சி.ஐ.டியிலும், முதுகலை கணினியல் படிப்பை குமருகுரு கல்லூரியிலும் படித்தார். இங்கிலாந்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் காலநிலை மாற்றம் (Climate Change) குறித்து மேற்படிப்பை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் இவர் தற்போது தன்னுடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.