Elephants behavior human animal conflicts wildlife photographer Jewsin Kinglsy shares his experience : ஒரு விசயத்தை எப்போதும் வல்லுநர்கள் அணுகுவதற்கும், முகநூல் கருத்தாளர்கள் அணுகுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரு புகைப்படம் அல்லது ஒரு நிகழ்வு இதனை முன்னும் பின்னும் தொடர்பில்லாமல் இடையில் இருந்து பார்த்துவிட்டு அதற்கு பல்வேறு கோணங்களில் பலவிதமான கருத்துகளை முன்வைப்பது என்பது இன்றைய காலகட்டத்தில், சமூக வலைதளங்களில் தவிர்க்கவே முடியாத இயல்பான ஒன்றாகிவிடுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு யானை ஒன்று தன்னுடைய உணவைத் தேடிக் கொண்டு மலைச்சரிவில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. எலுமிச்சை புல்லுக்காக உயிரைப் பணயம் வைக்கும் யானைகள் என்று ஆரம்பித்து, யானைகளை நாம் எப்படி ஒரு நம்பிக்கையற்ற, வாழவே தகுதியற்ற சூழலுக்குள் தள்ளிவிட்டோம் என்ற மனக்குமுறல்கள் வரை பேசப்பட்டது. ஆனால் யானை உண்மையாகவே லெமன் கிராஸ் சாப்பிடுமா என்று கேள்வி கேட்டால் யாருக்கும் பதில் தெரிவதில்லை.
அதனால் தான் அந்த புகைப்படத்தை எடுத்த அவரையே தொடர்பு கொண்டு வனவிலங்குகள் குறித்து நம்முடைய சந்தேகங்களை தெரிவுபடுத்திக் கொண்டோம். யானைகளை மட்டுமல்ல ஒவ்வொரு வன விலங்குகளின் வாழ்வியல் முறைகளையும் நாம் கொண்டாடத்தான் வேண்டுமே தவிர வருந்துவதற்கு அந்த புகைப்படத்தில் ஒன்றுமே இல்லை என்று புன்னகை புரிகிறார் வனவியல் ஆர்வலர் மற்றும் அந்த புகைப்படத்தை எடுத்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஜெஸ்வின்.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான இருப்பிட பகிர்தலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவரிடம் முதலில் கேள்வி கேட்கப்பட்டது!
தன்னுடைய முன்னோர்கள் அடிக்கடி காட்டில் வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டவர்கள் என்பதால் இயல்பிலேயே விலங்குகள் பற்றியும் காடுகள் பற்றியுமான புரிதல்கள் இருப்பதாக அறிவித்த அவர், இந்த இரு தரப்பிற்கும் இடையே இருக்கும் பிரச்சனையை இரண்டு கோணங்களில் இருந்து கூறுகிறார்.
முதலில் பெரிய அளவிற்கு பாதிப்புகளை சந்திப்பது என்பது என்னவோ மனிதர்கள் தான். யானைகள் தங்களின் இருப்பிடங்களில் இருந்து இறங்கி வருகிறது என்றால் அதன் முக்கிய இலக்காக இருப்பது எல்லாம் வயலும், வாழை மற்றும் கரும்புத் தோப்புகளும் தான். ஒரு விவசாயியின் 6 மாத உழைப்பினை ஒரு இரவில் மொத்தமாக காலி செய்துவிட்டு நகர்ந்து விருகிறது யானைகள்.
புலிகளும் மலைகிராமங்களில் ஊருக்குள் புகுந்துவிட்டால் மக்களின் நிலை மிகவும் மோசமாகிவிடுகிறது. ஒரு அவசரத் தேவை என்றால் கூட அவர்களால் வெளியேற இயலுவதில்லை. மனித இயல்புகளையும், மனிதர்கள் மீதான பயத்தினையும் புலிகள் இழந்துவிட்டால், அவைகளை எவ்வளவு அடர்த்தியான காடுகளுக்குள் கொண்டு போய் விட்டாலும் அவை மனிதர்கள் இருக்கும் இருப்பிடம் நோக்கி நகரத் துவங்கிவிடும். மலை கிராமங்களில் பள்ளிகளுக்கு செல்லும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இவை பெரிய அளவில் பாதிப்பினை உண்டாக்குபவை. விலங்குகள் தரப்பில் மிக முக்கியமான இரண்டு காரணங்களை முன் வைக்கின்றார்.
வனவிலங்குகளின் எண்ணிக்கை
வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அவைகளுக்கான வாழ்விடங்கள் குறைந்து கொண்டே வருகின்றது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்வதற்கு முன்பு ”கல்லாறு கோரிடர்” என்ற ஒரு பகுதியில் தான் யானைகள் சாலைகளை கடந்து வனப்பகுதிகளுக்குள் செல்லும். ஆனால் இன்று அந்த கோரிடர் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது யானைகள் மனிதர்கள் அதிகம் நடமாடும் ப்ளாக் தண்டர் வரை வந்து சாலைகளை கடக்கும் நிலை உருவாகியுள்ளது.
போதிய தொலை நோக்கு சிந்தனைகள் இல்லாமல் உருவாக்கப்பட்ட திட்டங்கள்
நாளுக்கு நாள் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதை கருத்தில் கொண்டு அவற்றின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதற்காக அரசு போதிய நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதன்படி வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகமானது. ஆனால் அதிகமாகும் வனவிலங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு காடுகள் இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. ஒவ்வொரு விலங்குகளுக்குமே அதனுடைய வாழ்வியல் எல்லைகள் இருக்கின்றன. விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது போதுமான இடம் கிடைக்காமல் மக்களின் கண்களில் படும் அளவிற்கு அவை வெளியே சுற்றி வருகின்றன.
வனத்தில் இருந்து வெளியேறும் விலங்குகளை அப்புறப்படுத்துதலின் போது அரசின் முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை… ஒரு வன ஆர்வலராக உங்களின் கருத்து!
மூன்று வருடங்களுக்கு முன்பு தொட்டபெட்டா மலையில் உள்ள குடியிருப்புகளில் புலி ஒன்று புகுந்து மூன்று நபர்களை கொன்றுவிட்டது. மேன் ஈட்டர்ஸாக மாறும் புலியை கொல்லக்கூடாது. பிடித்துக் கொண்டு போய் வனங்களில் விட்டுவிட வேண்டும் என்று பலத்த எதிர்ப்பு குரல் கிளம்பியது. மக்கள் நினைப்பது போல, அவ்வாறு வனங்களில் கொண்டு போய்விட்டால் அது மீண்டும் மனிதர்கள் இருக்கும் இடம் நோக்கி தான் நகரும். வனவிலங்குகளுக்கும் – மனிதர்களுக்கும் இடையான பயம் இரு தரப்பிலும் சரியாக இருக்க வேண்டும். மனிதர்களின் மீதான பயம் புலிகளுக்கு போய்விட்டால் புலிகள் அடிக்கடி மனிதக்கறி தேடி வேட்டையாட துவங்கிவிடும். “காட்டுயானைகள் என்றாலே அது சின்னத்தம்பி போன்று சாதுவாகத்தான் இருக்கும் என்று மனிதர்கள் நினைத்தாலும் அது பிரச்சனை தான். ஊருக்குள் புகுந்த புலி மனிதர்களை தொடர்ந்து வேட்டையாடுகிறது என்றால் அதனை கொல்வதினை தவிர வேறு வலியில்லை என்ற நிலை உருவாகிறது. பாதிப்புகளை கருத்தில் கொண்டே அதனை முடிவை மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது. அதே போன்று பிடிப்பட்ட புலியென்றால் அதனை வன காப்பகங்களில் கம்பிகளுக்கு பின்னால் பத்திரம் செய்வது தான் சரியாக இருக்கும். இல்லை என்றால் இரு தரப்பினருக்கும் ஆபத்து தான்.
சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற உத்தரவிடப்பட்டது குறித்து
அது சரியான முடிவு என்று தான் கூறுவேன். காட்டில் இருந்து வெளியே வந்த சின்னத்தம்பி இரண்டொரு நாட்கள் மட்டுமே மூர்க்கமாக இருந்தது. பின்பு அது மனிதர்களை பழக ஆரம்பித்துவிட்டது. செல்லும் இடங்களில் எல்லாம் மனிதர்கள் தண்ணீர் வைக்கின்றார்கள். உணவு அளிக்கின்றார்கள். பின்பு ஏன் அது காட்டுக்கு போக ஆசைப்பட போகின்றது. யானையை தேடியே அனைத்தும் வரும் போது, அந்த இயல்புக்கு மாறிவிடுகிறது. இதனால் எத்தனை முறை காட்டில் கொண்டு போய்விட்டாலும் ஊரில் இருக்கும் சௌகரியம் உணர்ந்த யானைகள் ஊருக்குள் தான் வரத்துவங்கும். அது பயம் இல்லாமல் சகஜமாகிவிட்டாலும் சில நேரங்களில் மனிதர்களுக்கு ஆபத்து தான். வனவிலங்குகளின் நடவடிக்கைகள் அறியாத நம்மால் அந்த யானை எப்போது எப்படி நடந்து கொள்ளும் என்பதை உணர்ந்து கொள்ளவே இயலாது. அதனை கும்கியாக மாற்றுவதில் தவறு ஏதும் இல்லை. 2 வருடங்களுக்கு கடினமான சவால் நிறைந்த பயிற்சிகளை அது மேற்கொண்டாலும் கூட அடுத்த 40 வருடங்களுக்கு அது உயிரோடு இருக்கும். மின்சார வேலிகளில் கால் வைத்தோ, ரயில் தண்டவாளங்களில் மாட்டியோ அது இறப்பதற்கு, கும்கியாக இருப்பதால் அது உயிரோடு இருக்கிறது என்ற நிம்மதி தான் அனைவருக்கும் முக்கியமானது.
வனவிலங்குகளுக்கும் பழங்குடிகளுக்கும் இடையே இருக்கும் புரிந்துணர்வு குறித்து
இந்த உலகில் இயற்கையை ஒரு பழங்குடியினர் நேசிப்பதை போன்று வேறு யாராலுமே நேசித்துவிட இயலாது என்பது தான் உண்மை. யானைகள், புலிகள் என விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் தான் பழங்குடியினரும் வசிப்பார்கள். ஆனால் எப்போதுமே ஒரு காட்டு உயிரினம் தாக்கி ஒரு பழங்குடி மனிதன் இறந்தான் என்ற செய்தியை எங்குமே கேட்க இயலாது. ஏன் என்றால் யாரும் யாரையும் அங்கு தொல்லை செய்வதில்லை.
வன விலங்குகள் நடமாட்டங்கள் அதிகமாகும் பட்சத்தில் நகர்புறம் நோக்கி ஆதிகுடிகள் நகர்ந்து விடுகிறார்கள். இதனால் காடுகளுக்கும் வன உயிரினங்களுக்கும் பாதுக்காப்பற்ற தன்மை உருவாகுவதை யாராலும் தடுக்க இயலுவதில்லை. பூர்வீக குடிகள் காட்டில் இருக்கும் வரையில் தான் காடுகள் பாதுகாப்பாக இருக்கிறது. சைலண்ட் வேலி என்ற இடத்தில் நான் சென்று தங்கியிருந்த கால கட்டத்தில் எந்த வனவிலங்குகளும் பழங்குடிகளின் வாழ்விடம் நோக்கி நகர்ந்து நான் பார்க்க்கவில்லை என்றார் ஜெஸ்வின்.
இளம் புகைப்பட கலைஞர்களுக்கு உங்களின் அறிவுரை
ஒரு இயற்கை, வன உயிரியல் ஆர்வலராக இல்லாத ஒருவரால் ஒருபோதும் நல்ல வன உயிரியல் புகைப்பட கலைஞனாக உருப்பெற இயலாது. ஏன் என்றால் வன உயிரியல் ஆர்வலர்களால் மட்டுமே ஒரு பூ எப்போது பூக்கும் என்பது துவங்கி, ஒரு யானை எப்போது எந்த வழித்தடத்தில் பயணிக்கும், எந்த பறவை எந்த காலத்தில் எந்த நாட்டில் இருந்து பல்லாயிரம் மைல்கள் பறந்து சரணாலயாத்தில் சரண் புகும் என்பதை அறிந்திருக்க முடியும்.
புகைப்படக்கலைஞனால் ஒரு வன உயிரினத்தை வெறும் பொருளாகவே பார்க்க இயலும். ஆனால் ஒரு வன ஆர்வலரால் தான் ஒரு விலங்கு எந்த விதமான நடவடிக்கையினை வெளிக்கொணரும் போது அழகாக இருக்கும் என்பதை அறிய முடியும். எடுத்துக்காட்டிற்கு தவளையை புகைப்படம் எடுக்கலாம் என்று செல்வார்கள்… ஆனால் தவளை தன் வாயால் குமிழ் விடும் தருணத்தில் தான் அழகாக இருக்கும். ஒரு வனவியல் புகைப்பட கலைஞன் முதலில் இயற்கையை ரசிக்கும் ஒருவனாக இருக்க வேண்டும். பயன்படுத்தும் கேமராக்கள் என்பது எல்லாம் இரண்டாம் பட்சம் தான். என்னுடைய முகநூலில் பதியப்படும் புகைப்படங்கள் அனைத்துமே Canon 1300D- என்ற அடிப்படை கேமராவில் எடுத்தது தான். சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் அது தான் உண்மை. இயற்கையை ரசிக்க கற்றுக்கொள்ளுதல் தான் முதல்படி.
உங்கள் வைரல் புகைப்படம் பற்றி
யானைகள் லெமன் கிராஸ் சாப்பிடும் என்பதெல்லாம் நான் கூறியதில்லை. என்னுடைய புகைப்படத்திற்கு எழுதப்பட்ட கற்பனை வரிகள். ”யானைகள் உயிரை பணயம் வைத்து” என்பது எக்ஸ்கிரேட்டிங்… வனத்தில் வாழும் ஒரு உயிரினம் எப்படி வாழும் என்று நினைக்கின்றீர்கள்… “நேராக சென்று, பாதையை கடந்து” இதற்கிடைப்பட்ட 2 நிமிடங்களை தான் சராசரி மனிதன் வனவிலங்குகளோடு செலவிடுகிறான். ஆனால் வனமே அதற்கு சொந்தம். அது உயிரை எல்லாம் பணயம் வைப்பதில்லை. அது இயல்பிலேயே அப்படித்தான். யானையின் நடவடிக்கைகளில் ஒன்றை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்று அந்த நிகழ்வை கொண்டாடித்தான் இருக்க வேண்டும் என்கிறார்.
ஜெஸ்வின் பற்றி
ஜெஸ்வின் கிங்ஸ்லி மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கானா வன உயிரினங்கள் காப்பகத்தில், கிம்ப்ளிங் கேம்ப்பின் தலைமை நேச்சுரலிஸ்ட்டாக 2 வருடங்கள் பணியாற்றி வருகிறார். வனவியல் புகைப்படக்கலைஞர்கள் சுதிர் சிவத்திற்கு வன விலங்குகள், ராதிகா ராமசாமி அவர்களுக்கு பறவைகள் மீது ஈர்ப்பு இருப்பதைப் போல், புலிகள் பற்றிய ஆவணங்களை அதிகம் பதிவு செய்வதிலும், பாம்புகள், தவளைகள் உள்ளிட்ட ஊர்வனங்கள் குறித்த ஆவணங்களை பதிவு செய்வதிலும், வண்ணத்துப்பூச்சிகள் குறித்து அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். ஜெஸ்வின் ஒரு மெரைன் எஞ்சினியராக தன்னுடைய வாழ்வை துவங்கினாலும் தன்னுடைய விருப்பம் புகைப்படம் எடுப்பது தான் என்று முடிவு செய்து பின்னர் இந்த துறையில் தடம் பதித்திருக்கிறார்.