கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மருதமலை, ஓணாப்பாளையம், தாளியூர், கெம்பனூர், வண்டிக்காரனூர், குப்பேபாளையம், விராலியூர், ஆலாந்துறை, கணுவாய், தடாகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாக காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாகவும், குட்டிகளுடனும் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டு வருகின்றன.
முன்பெல்லாம் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னங்குருத்து, பாக்கு, அரசாணிக்காய், தக்காளி, சோளக்கதிர் போன்றவற்றை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வந்தன.
தற்போது விளை நிலங்களை சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதால், காட்டுயானைகள் கிராமங்களுக்குள் நுழைந்து வீதிகளுக்குள் உலா வருகின்றன. மேலும் ரேஷன் கடையில் உள்ள அரிசிகளை குறி வைத்து நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்த சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்க வனத்துறை பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு தடாகம் அருகே காளையனூர் பகுதியில் மனோகரன் என்பவர் தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை வனத் துறையினர் விரட்டிச் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு புகுந்தது. பின்னர் மீண்டும் அந்த ஒற்றைக் காட்டு யானையை வனத் துறையினர் விரட்டினர்.
இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சோமையனூரில் இருந்து காளையனூர் செல்லும் வழியில் நடைப் பயிற்சிக்கு சென்ற கணேசன் என்பவரை அந்த ஒற்றை காட்டு யானை தாக்கியது. அதில் படுகாயம் அடைந்த அவர் கை உடைந்தது. இதுகுறித்து தகவலின் பெயரில் அப்பகுதியில் கண்காணித்து வந்த வனத்துறை குழுவினர் உடனடியாக அங்கு சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தொடர்ந்து இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நிரந்தரமாக அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“