கோவை அருகே உள்ள காருண்யா பகுதியில், பப்பாளிப் பழங்களைத் தேடி வந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு காட்டு யானை, விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு, வனப்பகுதியில் இருந்து மூன்று காட்டு யானைகள் சோலை படுகை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. இதனைக் கண்ட விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பிச் செல்ல, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு காட்டு யானை மட்டும் வழிதவறி, சோலை படுகை அருகே உள்ள நிர்மலா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் நுழைந்தது.
அங்கு, கிணற்றுக்கு அருகே இருந்த பப்பாளி மரத்தில் காய்த்துத் தொங்கிய பழங்களைக் கண்ட யானை, அதனை உண்ணும் ஆவலில் கிணற்றின் விளிம்பை நெருங்கியது. துரதிர்ஷ்டவசமாக, கால் இடறி, ஆழமான அந்தக் கிணற்றுக்குள் பரிதாபமாக விழுந்தது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/31/whatsapp-image-2025-07-31-11-21-12.jpeg)
இந்தச் சம்பவம் குறித்துத் தோட்டத்தின் உரிமையாளர் நிர்மலா கணேசன், உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், ஜே.சி.பி, புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்களின் உதவியுடன் யானையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மீட்புப் பணி, துரதிர்ஷ்டவசமாக தோல்வியில் முடிந்தது. கிணற்றுக்குள் விழுந்த யானை, மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்த காட்டு யானை இப்பகுதியிலேயே முகாமிட்டு சுற்றித்திரிந்ததாகவும், இதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கை நிறைவேறாமலேயே, யானையின் உயிர் பப்பாளிப் பழ ஆசையால் பரிதாபமாகப் பறிபோனது.
உயிரிழந்த யானையின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக கோவை குற்றாலம் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.