Coimbatore News in Tamil: கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி தமிழ்நாடு - கேரளா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. 70 சதவீத வனப்பகுதி கொண்ட ஆணையிட்டியில் காட்டு யானைகள், மான்கள், உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக காட்டு யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வைக்கும் ஆனைகட்டி பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும் உண்டு.
இந்நிலையில் ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழக கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நின்று கொண்டிருக்கிறது. வாயில் காயம் ஏற்பட்ட நிலையில் உணவு எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் யானை இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று முன் தினம் மாலை முதல் இந்த யானை ஆற்றில் நின்று கொண்டு இருப்பதால், இதற்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் இடையே குழப்பம் நீடித்து வந்தது. அதே சமயம் கேரளா வனப்ப குதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரள வனத் துறையும், தமிழக வனப் பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் தமிழக வனத்துறையினரும் நின்றனர். இதன் காரணமாக அந்த காட்டு யானை எந்த பகுதிக்கு செல்வது என தெரியாமல் ஆற்றின் நடுவில் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்தது.
மேலும் ஆற்றின் நடுவே நின்று கொண்டிருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு உடனடியாக தமிழக வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் எனவும் கேரள வனத் துறையினர் நேற்று முதல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். யானையை காப்பாற்ற தமிழக வனத்துறையினர் முன் வர வேண்டும். யார் சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் இழுத்தடிப்பு செய்து வருவது முறையல்ல. காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
வழக்கமாக காவல் துறையில் எல்லைப் பிரச்சனை காரணமாக வழக்குகளை யார் விசாரிப்பது என்பதில் குழப்பம் இருந்து வரும் நிலையில், வனத்துறையிலும் எல்லை பிரச்சனையால் யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழக கேரளா வனத்துறையினர் யோசனை செய்து வருவது சூழலியல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழ்நாடு வனத்துறையினர் காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கொடுங்கரை ஆற்றுப் பகுதிக்கு வனத்துறையினர் சென்று பார்த்த போது, அப்பகுதியில் இருந்த காட்டு யானை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த யானையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டு யானையின் இருப்பிடத்தை கண்டறிய ட்ரோன் மூலம் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் கோழிக்கமுதியில் இருந்து முதற்கட்டமாக கும்கி யானை கலீம் ஆனைகட்டி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து யானையின் இருப்பிடம் தமிழ்நாடு பகுதிக்குள் இருந்தால் கோவை வனத்துறையினரும், கேரளாவிற்குள் இருந்தால் அம்மாநில வனத்துறையினரும் சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர்.
ட்ரோன் மூலம் யானையின் இருப்பிடத்தை கண்டறிந்து பின்னர் கும்கி யானை உதவியுடன் உடல் நலம் இல்லாமல் இருக்கும் யானைக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தற்போது சுமார் 70 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Video || கோவை: இளம் யானைக்கு காயம்... சிகிச்சையளிக்க கும்கி - ட்ரோனுடன் களம் இறங்கியுள்ள வனத்துறை!https://t.co/gkgoZMIuaK | @rahman14331 | #coimbatore pic.twitter.com/7w17GjkEYh
— Indian Express Tamil (@IeTamil) August 17, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.