கோவை கொடிசியா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அந்த வழியாக டூவிலரில் வந்த இளைஞர் தடுமாறி கீழே விழுந்து உயரிந்தார்.
கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த்(26). இவர் சேரன் மாநகரில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்றிரவு சுமார் 12 மணியளவில் கடையை மூடிவிட்டு, சந்திரகாந்த் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கொடிசியா பகுதியில் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து சந்திரகாந்த் உயிரிழந்தார்.
தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் சார்பில் அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வேகத்தடையில் வெள்ளை நிற கோடு எதுவும் இல்லாமல் இருந்த காரணத்தால் - இரவு நேரத்தில் வேகத் தடை இருப்பது தெரியாமல் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது என அங்குள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்து காவல்துறையினர் இரவோடு இரவாக, வேகத்தடை இருப்பதற்கான வெள்ளை கோடுகளை போட்டனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அங்கிருந்த வேகத்தடை அகற்றப்பட்டுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“