கோவை: தென்னை மரங்களில் மின் இணைப்பு; இளைஞர் பலி; 6 பேர் கைது
Youth killed by illegal electricity connection; 6 people were arrested in Coimbatore Tamil News: கோவை அன்னூர் கஞ்சப்பள்ளி பகுதியில் உள்ள தென்னை மரங்களில் கொடுக்கப்பட்ட சட்டவிரோத மின் இணைப்புக்கு இளைஞர் ஒருவர் பலியான சம்பவத்தில், போலீசார் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Coimbatore Youth killed by illegal electricity connection Tamil News
Coimbatore News in Tamil: கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள ருத்ரையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜித் (22 ). இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகேஷ் வயது (21). இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.
Advertisment
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மது போதையில் இருந்த சுஜித் தனது மனைவியிடம் கஞ்சப் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரது மனைவி அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது கஞ்சப்பள்ளியில் உள்ள சென்னியப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்த கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து அவர் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னூர் போலீசார் சுஜித்தின் சடலத்தை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மனைவி மகேஷ் அளித்த புகாரின்பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சுஜித்தின் மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் சுஜித் மின்சாரம் தாக்கி விழுந்து கிடந்த இடத்தில் ஆய்வு செய்த போது துரைசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள அனைத்து தென்னை மரங்களுக்கும் சட்டத்திற்கு விரோதமாக மின் இணைப்பு கொடுத்திருப்பது தெரியவந்தது.மேலும் சுஜித் தென்னை மரத்தில் ஏறும்போது தான் மின்சாரம் தாக்கி இறந்தார் என்பதும் தெரிய வந்தது.
இதனால் சுஜித்தின் மரணத்திற்கு காரணமாக இருந்த துரைசாமி, அவருக்கு உடந்தையாக இருந்த ரங்கசாம, குணசேகரன், பழனிச்சாமி, வெங்கிட்டான், முத்துக்குமார் உள்ளிட்ட 6 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் பாணியில் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் துரைசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களுக்கு சட்டவிரோத மின்இணைப்பு கொடுத்ததும், அதில் சிக்கி பெயிண்டர் சுஜித் இறந்ததும், இதனை மறைக்க சுஜித்தின் சடலத்தை 6 பேரும் சேர்ந்து சென்னியப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீசியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அன்னூரில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.