Advertisment

அதிவேகமாக வாகனம் ஓட்டிய வழக்கு; டிடிஎப் வாசன் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

பிரபல யூட்யூபர் ஜி.பி.முத்துவை சந்தித்த டிடிஎப் வாசன், அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
TTF Vasan arrested

TTF Vasan arrested

கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன், Twin throttlers என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு  சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2’கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

Advertisment

இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் இருக்கும் நிலையில், கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார்.

அவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டனர். இணையத்தில் சரமாரியாக டி.டி.எஃப் வாசன் மீது விமர்சனம் எழுந்தது.

இவரது பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது என இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட டிடிஎஃப் வாசன், தான் பயிற்சி எடுத்துக் கொண்டே இத்தகைய ஸ்டண்டுகளில் ஈடுபடுவதாகவும், அதிவேகமாக பைக் ஓட்டியதாக சொல்லப்பட்ட வீடியோ ஜமுனா ஹைவேஸ் சாலையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால் அப்பிரச்சனை முடிவுக்கு வந்ததாக நினைத்திருந்த நிலையில் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த பிரபல யூட்யூபர் ஜி.பி.முத்துவை சந்தித்த டிடிஎப் வாசன், அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டியுள்ளார்.

ரைடுக்கு கிளம்பும் முன் வாசனின் பைக்கை பார்த்து ஜி.பி.முத்து இதில் பிடிமானம் கூட இல்லையே என தெரிவிக்க, என்னை பிடித்துக் கொள்ளுங்கள் என டிடிஎப் வாசன் கூறுகிறார்.

பின்னர் இருவரும் நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பியதாக தெரிவித்து கன்னத்தில் முத்தமிட்டு கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து 20 கி.மீ. தூரத்தை பைக்கில் செல்ல முடிவு செய்கின்றனர்.

டி.டி.எப்.வாசன் பைக்கில் ஏற முடியாமல் ஏறும் ஜி.பி.முத்து தனக்கு வேகமாக போக பிடிக்காது என தெரிவிக்கிறார்.

ஆனால் அதைக் கேட்காமல் வாகன நெருக்கடி நிறைந்த சாலையில் 150 கி.மீ.க்கு மேலான வேகத்தில் செல்லும் டிடிஎப் வாசன், ஜி.பி.முத்துவுக்கு மரண பயத்தை காட்டுகிறார். இதனால் அவர் கதறுவதை காமெடியாக டிடிஎப் வாசன் எடுத்துக் கொள்கிறார்.

எதிர்திசையில் வாகனங்கள் வரும் நிலையில் கையை விட்டு வேகமாக ஓட்டும் நிலையில் ஜி.பி.முத்து ஹெல்மெட் கூட அணியாமல் பின்னால் அமர்ந்து இருக்கிறார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் இப்படி சாலை விதிகளை மீறும் டிடிஎப் வாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் டிடிஎப் வாசன் பிரபல யூடியூபர் ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து கோவை - பாலக்காடு சாலையில் அசுர வேகத்தில் இயக்கி அவருக்கு பயத்தை காட்டிய வீடியோ வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து டிடிஎப் வாசன் மீது போத்தனூர் காவல் துறையினர் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக டிடிஎப் வாசன் மதுக்கரை நீதிமன்ற சரணடைந்து, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்..

இதேபோல கோவை - பாலக்காடு சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால், சூலூர் காவல் நிலையத்திலும் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவிலும், மோட்டார் வாகன சட்டப்படி பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய 2 பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக சூலூர் காவல் நிலையத்திற்கு வந்த டிடிஎப் வாசனை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவருக்கு அறிவுரை வழங்கி காவல் நிலைய ஜாமீனில் டிடிஎப் வாசன் விடுவிக்கப்பட்டார்.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment