/indian-express-tamil/media/media_files/2025/10/17/ma-su-on-gold-rif-2025-10-17-12-47-19.jpg)
கோல்ட்ரிப் மருந்து நிறுவனத்துக்கு அ.தி.மு.க ஆட்சியில் அனுமதி: இ.பி.எஸ் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மா.சு பதில்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாகத் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். சர்ச்சைக்குரிய நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், நிறுவனம் மூடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கங்கள்:
மத்தியப் பிரதேசத்தின் சிந்துவாரா மாவட்டத்தில் செப்டம்பர் 4 அன்று, 'கோல்ட்ரிப்' மருந்தைச் சாப்பிட்டு குழந்தைகள் இறந்ததாக, மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் இருந்து தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு அக்.1 அன்று பிற்பகல் 3 மணியளவில் தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த அன்றைய தினம் மாலை 4 மணிக்கு துணை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் உத்தரவின்பேரில் முதுநிலை மருந்து ஆய்வாளர் தலைமையில் சம்பந்தப்பட்ட தமிழக நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு எந்த மருந்துகளையும் கொள்முதல் செய்வதில்லை.
அக்.1 மற்றும் 2 ஆகிய 2 நாட்களில் மேற்கொண்ட ஆய்வில், மருந்து தயாரிப்பில் விதிமீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 'கோல்ட்ரிப்' உள்ளிட்ட 5 மருந்துகள் சென்னைக்கு பகுப்பாய்விற்காகக் கொண்டு வரப்பட்டன. அதில், 'கோல்ட்ரிப்' மருந்தில் 48.6% 'டை எத்திலீன் கிளைக்கால்' (Diethylene Glycol) என்ற வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இது உயிருக்கு ஆபத்தானது என்றும் உறுதி செய்யப்பட்டது.
'கோல்ட்ரிப்' மருந்து புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால், அங்கும் விபரீதங்கள் நிகழாமல் இருக்க அந்த மாநில அரசுகளுக்கு உடனடியாகத் தமிழக அரசு தகவல் அனுப்பியது. சர்ச்சைக்குரிய மருந்தைத் தனியார் யாரும் வாங்கி விற்பனை செய்யக் கூடாது எனத் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மருந்து தயாரிக்கத் தடை விதிக்கப்பட்டு, உடனடியாக முழுவதுமாக சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்டதால் 25 குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாகவே கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. குழந்தைகள் இறப்பு நடந்து 25 நாட்களுக்குப் பின் தமிழகத்துக்குத் தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த 2 நாட்களுக்குள் மருந்து தயாரிப்பு நிறுத்தப்பட்டு, நிறுவனம் மூடப்பட்டது. 25 குழந்தைகள் மரணம் தொடர்பான சர்ச்சைக்குரிய ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில்தான் உரிமம் வழங்கப்பட்டது.
நிறுவனம் தொடங்கப்பட்ட 2011-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு செய்யவில்லை. 2019 முதல் 2022 ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த நடவடிக்கையும் எடுத்துள்ளது. கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாததால், 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய மருந்து நல்லது என மத்தியப் பிரதேச அரசே சான்றிதழ் அளித்திருந்தது. எந்த மருந்து நிறுவனம் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருந்து உற்பத்தியைக் கண்காணிக்கச் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.