தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் 2018 மே 22ஆம் தேதி வன்முறையாக வெடித்தது.
போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர்.
தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என வேதாந்தா நிறுவனம் கேட்டுக்கொண்டது.
அதற்கு தமிழ்நாடு அரசு முட்டுக்கட்டை போட்டது. இதனை அரசே செய்யும் எனக் கூறியது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தொடர்ந்து, இதற்கான செயல்முறையை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) அறிவித்தார். அப்போது அவர், “சார் ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு இதனை கண்காணிக்கும்; ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த 2 நபர்கள் இக்குழுவில் இருப்பார்கள்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இப்பணிகள் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து பணிகள் நடைபெறும். இந்தக் கழிவுகள் வெளியேற்றும் பணிகளுக்காக ஆலையில் தொழிலாளர்கள் செல்லும் கதவுகள் மட்டும் திறக்கப்பட்டு அந்த கேட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.
பின்னர் இந்த கழிவுகள் அகற்றும் பணியின் போது 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாரம் ஒருமுறை ஆலையில் எவ்வளவு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது என்பது தொடர்பான அறிக்கையினை ஆய்வுக்குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“