தமிழகத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இருந்து 80 மாணவிகள், உயர் ரக ஹேர் ஆயில், கண்டிஷனர் ஷாம்பூ, என பார்த்துப் பார்த்து வளர்த்த தங்களின் அழகிய கூந்தலை புற்றுநோய் நோயாளிகளுக்கு தானமாக வழங்கியுள்ளனர். அவர்களுக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக, பெண்ணை வர்ணிக்கும் கவிதைகளில் பெண்களின் கூந்தலை வர்ணிக்கும் கவிதைகள் அதிகம். கார்குழல், கார்கூந்தல், கார்மேகக் கூந்தல் என பல கவிதைகள் காதலியின் அல்லது பெண்ணின் கூந்தலை வர்ணித்து எழுதப்பட்டுள்ளன.
பெண்களுக்கு கூந்தல் அவர்களின் வசிகரிக்கும் அழகில் ஒன்று என்றால் அது மிகையல்ல. அழகான கூந்தலுக்காக பல இளம் பெண்கள் உயர் ரக ஹேர் ஆயிள், கண்டிஷனர் ஷாம்பூ என தங்கள் தலைமுடியை பார்த்துப் பார்த்து வளர்ப்பார்கள்.
அப்படி வளர்க்கப்பட்ட கூந்தலை விதவிதமாக சடைகள் பிண்ணி தங்களை அழகுபார்ப்பார்கள். இப்படி கூந்தல் இளம் பெண்களின் அழகாக விளங்குகிறது. அதனால்தான், இளம் பெண்கள் தலையில் இருந்து ஒரு முடி உதிர்ந்தாலும் கவலைப்படத் தொடங்கிவிடுவார்கள்.
தமிழகத்தில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கிற 80 மாணவிகள் தங்களின் அழகிய கூந்தலில் ஒரு பகுதியை புற்றுநோய் நோயாளிகளுக்கு விக் செய்ய தானமாக அளித்துள்ளனர்.
மனிதர்களைத் தாக்கும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்று நோய் உள்ளது. புற்றுநோய் சிகிச்சையின் போது அவர்களுடைய தலைமுடியை இழக்க வேண்டியுள்ளது. இதனால், புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் விக் வைத்துக்கொள்கின்றனர். ஆனால், அவர்களுக்கு விக் செய்வதற்கு நல்ல தலைமுடி தேவை.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மனம் தளர்ந்துபோயிருக்கும் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கல்லூரி மாணவிகள் 80 பேர் தங்கள் கூந்தலின் ஒரு பகுதியை விக் செய்ய அளித்துள்ளனர். இந்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பலரும் அந்த மாணவிகளை பாராட்டி வருகின்றனர்.
மாணவிகளின் இந்த இதயப்பூர்வமான மனிதநேய செயல்பாட்டை தமிழ்நாடு மஹிளா காங்கிரஸ் கட்சி பாராட்டி டுவிட் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மஹிளா காங்கிரஸ் பிரிவு தனது டுவிட்டர் பக்கத்தில், “கொடுப்பது என்பது நன்கொடை அளிப்பது மட்டுமல்ல, அது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதாகும். கோயம்புத்தூரைச் சேர்ந்த 80 கல்லூரி மாணவர்கள் தங்கள் தலைமுடியின் ஒரு பகுதியை புற்றுநோய் நோயாளிகளுக்கு வழங்கினர். இந்த கருணையான செயல் நிதி உதவியாக இல்லாவிட்டாலும் நிச்சயமாக பெண்களுக்கு அளிப்பதற்கான வழி” என்று தெரிவித்துள்ளது.
கல்லூரி மாணவிகளின் இந்த செயலை, ஒரு டுவிட்டர் பயனர், “இதுதான் சக்தி. எப்போதும் மனிதகுலத்தின் முன்னேற்றம் / நல்வாழ்வுக்கான தேவியாக வருகிறது.” என்று குறிப்பிட்டு பாராட்டியுளார்.
மற்றொருவர், “இந்த பெண்கள் அவர்களின் மதிப்புமிக்க ஒன்றை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கு வணக்கம் செலுத்துங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"