Advertisment

கோவையில் போதை மீட்பு மையத்தில் கல்லூரி மாணவர் மரணம் : வாடர்ன் உட்பட 5 பேர் கைது

கோவை போதை மீட்பு மையத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்லூரி மாணவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore1225

போதை மறுவாழ்வு மைய நிர்வாகிகள்

கோவையில் போதை மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கரூரைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவர் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் (20) கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த மாணவன் போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க பெற்றோர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் என்ற போதை மீட்பு மையத்தில் அவரை சிகிச்சைக்காக பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். கடந்து சில நாட்களாக மாணவனுக்கு அங்கு வார்டன் அரவிந்த் ஹரி, உளவியல் மருத்துவர் ஜவ பிரசன்னா ராஜ் ஆகியோர் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சை முறைகள் கடுமையாக இருந்ததாலும், போதையில் இருந்து மீள முடியாமல் மாணவன் தவித்து வந்ததாலும் வீட்டிற்கு செல்ல வேண்டுமென கூறி அடம்பிடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீட்பு மைய ஊழியர்கள், நேற்று மாணவனின் கை, கால்களை கட்டி அவருக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்துள்ளனர்.

அப்போதும் அவர் அதிக கூச்சலிட்டதால், அவரது வாயில் துணியை வைத்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு மாணவன் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மைய நிர்வாகிகள் இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற கோவில்பாளையம் போலீஸார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிகிச்சையின் போது மாணவர் உயிரிழந்தது உறுதியானது. இதையடுத்து சிகிச்சை மையத்தின் வார்டன்  அரவிந்த் ஹரி, உளவியல் மருத்துவர் ஜவ பிரசன்னா ராஜ் மற்றம் திருச்சூர் மாவட்டம் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மேஜூ ஜான், ஊட்டியைச் சேர்ந்த சந்தோஷ் புதுக்கோட்டை மாவட்டம் மணிகண்டன் ஆகியோரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மையத்தில் மேலும் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.  மாணவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த 30 பேரையும் வேறு மையத்திற்கு மாற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போதை மறுவாழ்வு மையத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment