சென்னை, கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த தனது இயர்ஃபோனை எடுக்க முயன்ற மாணவர் மீது ரயில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை, நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி பயின்று வந்தவர் ராஜகோபால். விழுப்புரத்தைச் சேர்ந்த 19 வயதான இந்த இளைஞர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு விடுதியில் தங்கி பயின்று வந்தார். இந்த மாணவர் கல்லூரி முடிந்த பின்னர், பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையன்று வேலைக்காக சென்று கொண்டிருந்த போது, அவரது ப்ளூடூத் இயர்ஃபோன் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் தவறி விழுந்தது. அப்போது, இயர்ஃபோனை எடுக்க முயன்ற ராஜகோபால் மீது, தாம்பரத்தில் இருந்து வந்த புறநகர் ரயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சடலத்தை மீட்ட போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.