ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா என்பது அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது என வடிவேலு நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
Advertisment
நேற்று (மார்ச் 12) சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்வதற்கு தான் 3 முக்கிய திட்டங்கள் வைத்துள்ளதாகக் கூறினார். கட்சியில் குறைவான பதவிகள், 50 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு வாய்ப்பு, கட்சித் தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு ஆகிய 3 திட்டங்களை வைத்திருப்பதாக ரஜினி கூறினார். தான் கட்சித் தலைவராக இருப்பேன் எனவும், முதல்வராக இருக்க மாட்டேன் எனவும் ரஜினி கூறினார். மேலும், மக்களிடம் எழுச்சி ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, "உலக நன்மைக்காக சாமி தரிசனம் செய்தேன். கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது. நாம் அதை பெரிதாக வரவேற்க வேண்டும். அவர் தான் முதல்வர் வேட்பாளர்-னு சொன்னாங்க; இப்போ இப்படி அறிவிச்சிருக்கார். இதை கண்டிப்பா வரவேற்கணும்.
ஆனா, ரஜினி அரசியலுக்கு வருகிறாரா என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. அவர் வரும்போது பார்த்துக்கொள்வோம்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, என் திட்டம் என்னன்னு கேளுங்க. 2021ல நான் முதல்வராகலாம்-னு இருக்கேன். 2021ல நான் தான் தமிழக முதல்வர்" என்றும் நகைச்சுவையுடன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”