தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்களை காக்கவும், போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கிடவும், "போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு" என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக காவல்துறை இயக்குநர் சி.பி.சங்கர் ஜிவால், அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரில் உள்ள பெட்டிக் கடைகள், டீ கடைகள் மற்றும் கூல்டிரிங்ஸ் கடைகளில் (குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள கடைகளில்) குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல்பான் மசாலா போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உதவியுடன் சிறப்பு அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.
அதன்படி திருச்சி மாநகர் முழுவதும் உணவப் பாதுகாப்புதுறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உதவியுடன் காவல்துறையினர் இணைந்து பள்ளி, கல்லூரி அருகில் உள்ள பெட்டிக் கடைகள், டீ கடைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள கூல்டிரிங்ஸ் கடைகளில் குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல்பான் மசாலா போன்ற போதைப் பொருள்களை இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றதா என சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனையில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புலிவார்டு சாலையில் வாழைக்காய் மண்டி அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த TN 23 AW 3003 என்ற பதிவு எண் கொண்ட காரை சோதனை செய்தபோது, காரில் சுமார் ரூ.72,600 மதிப்புள்ள புகையிலை, RMD பான்மசாலா, விமல், கூல்லிப் போன்ற போதை பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போன், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து காரின் உரிமையாளர் லால்குடியை சேர்ந்த ராம்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்தனர். அதோடு மற்றொரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 70 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1,00,000 ஆகும்.
சோதனையின் முடிவில் 37 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 37 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர் முழுவதும் நடைபெற்ற மேற்கண்ட சிறப்பு சோதனையில் காவல் துணை ஆணையர்கள், வடக்கு மற்றும் தெற்கு காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்த அலுவலர்கள் ஈடுபட்டனர்.
பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே இளைஞர்களையும், சமுதாய சீரழிவையும் ஏற்படுத்தும் வகையில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் : 96262-73399 மூலமும், காவல்துறை அவசர உதவி எண்.100க்கும் மற்றும் சம்மந்தப்பட்ட காவல் நிலைய தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்தார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று "போதை பொருள் தடுப்பு சிறப்பு சோதனைகள்” (Special Drive) தொடர்ந்து நடைபெறும் எனவும், புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது தொடர்ந்து சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி எச்சரித்தார். திருச்சி மாநகர காவல் ஆணையரே களத்தில் இறங்கி போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றதா என பெட்டிக் கடைகளில் சோதனை நடத்திய சம்பவம் திருச்சி வணிகர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.