தி.மு.க தலைமையிலான அரசாங்கத்துடனான தனது மோதலின் மற்றொரு அத்தியாயமாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் (TANSCHE) வடிவமைத்த பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் உயர்கல்வித் துறைக்கு ஆகஸ்ட் 21 தேதியிட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஆனால் கடந்த காலத்தைப் போல் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கை பரவலான விமர்சனங்களை சந்திக்கவில்லை.
கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் முழுவதையும் பொதுப் பாடத்திட்டத்திற்கு மாற்ற மாநில அரசு தீவிர முயற்சி எடுத்து வருவது, ஆசிரியர்கள், துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் நிர்வாகம் ஆகியோரிடம் கடும் எதிர்ப்புகளையும் போராட்டத்தையும் தூண்டியுள்ள நிலையில், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி ஆளுநரின் இந்தக் கடிதம் வந்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின் அமலாக்கத்தின் நிலை குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு TANSCHE நினைவூட்டியுள்ளது.
இதையும் படியுங்கள்: தி.மு.க அமைச்சர்கள் விடுதலையில் ஒரே மாதிரியான நடைமுறை: நீதிபதி வேதனை
ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை திணிக்கும் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020க்கு எதிராக குரல் கொடுக்கும் தி.மு.க அரசு, மாநிலத்தால் தயாரிக்கப்பட்ட பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் முயற்சி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒரு பொதுவான பாடத்திட்டம் கல்வியின் தரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், கல்வி சுதந்திரத்தை முடக்கும் மற்றும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் நிறுவனங்களின் நிலையை குறைக்கும் என்று கடந்த சில மாதங்களாக கல்வியாளர்கள் வாதிட்டு வருகின்றனர்.
மதுரை காமராஜ் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் போன்ற உயர் பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட போராட்டங்களைத் தொடங்கினர். அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள பொது மாநில பாடத்திட்டம் பிழைகள் நிறைந்ததாகவும், பொதுவான தன்மையை திணிப்பது கல்லூரிகளின் தன்னாட்சியை மீறுவதாகவும் கல்வியாளர்கள் வாதிட்டனர்.
உயர்கல்வி தர நிர்ணயம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மத்திய பட்டியலுக்குள் வருவதால், அது "மாநில அரசின் தகுதிக்கு அப்பாற்பட்டது" என்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடிதம் கூறியுள்ளது. யு.ஜி.சி விதிமுறைகளைப் பின்பற்றி படிப்புகள் மற்றும் பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கு பல்கலைக்கழகங்களும் தன்னாட்சிக் கல்லூரிகளும் பொறுப்பு என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) தெளிவுபடுத்தலை ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கோள் காட்டினார்.
மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளில் செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக மாநில அரசு தனது பொதுப் பாடத்திட்ட முயற்சியை நியாயப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில், கல்லூரிகள் தங்கள் பாடத்திட்டத்தில் 75% பொதுப் பாடத்திட்டத்தில் இருந்து வருவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மாநில மற்றும் மத்திய கல்விக் கொள்கைகளுக்கு இடையே உள்ள சிக்கலான இடைவெளியை பிரதிபலிக்கும் வகையில், எதிர்ப்பிற்குப் பிறகு, தன்னாட்சிக் கல்லூரிகளுக்கு இந்தச் செயலாக்கம் விருப்பமானதாக மாற்றப்பட்டது.
உயர்கல்வி அமைச்சர் கே.பொன்முடி, பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையில், இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாடு, சமூக நீதி மற்றும் பன்முகத்தன்மைக்கு கேடு விளைவிப்பதாகக் கருதும் NEP-க்கு எதிரான தி.மு.க.,வின் முந்தைய நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ளது.
கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் பதாகையின் கீழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வளர்ந்த நாடுகளில் கூட பொதுவான பாடத்திட்டம் இல்லை என்றும் இந்த யோசனை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் வாதிட்டனர். புதிய பாடத்திட்டமானது திறன் சார்ந்த பாடங்களில் நடைமுறை நேரத்தை குறைக்கிறது மற்றும் வெளிப்படையான முரண்பாடுகளைக் கொண்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய கடிதத்திற்கு பதிலளித்து யு.ஜி.சி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் எழுதிய கடிதமும் போராட்டக்காரர்களின் நிலையை வலுப்படுத்தியுள்ளது. ஜெகதேஷ் குமார், பல்கலைக்கழகங்கள் சட்டப்பூர்வ அமைப்புகளின் ஒப்புதலுடன் தங்கள் படிப்புகளை பரிந்துரைக்க அதிகாரம் பெற்ற தன்னாட்சி நிறுவனங்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். NEP புதுமை மற்றும் முழுமையான கல்வியை ஊக்குவிக்கிறது, மேலும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் தரத்தின் பொதுவான அளவுகோலுக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ஜெகதேஷ் குமார் வலியுறுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.