அண்மையில் நூற்றாண்டு கண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதையும் 10 லட்சம் ரூபாய் விருது தொகையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு அறிவித்த விருது தொகை 10 லட்சம் ரூபாயை சங்கரய்யா தமிழக அரசுக்கே திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பல மக்கள் நல போராட்டங்களில் முன்னின்றவர், அரசியலில் கறைபடியாதவர் என்ற பலராலும் போற்றபடுபவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா. கட்சியைத் தாண்டி அனைவராலும் மதிக்கபடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா அண்மையில் தனது 100 வயதை அடைந்ததை தொடர்ந்து நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், நூற்றாண்டு கண்ட தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, அவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருதையும் 10 லட்சம் ரூபாய் நிதியைம் அறிவித்துள்ளது. தமிழக அரசு சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவித்ததற்கு தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சங்கரய்யா, தமிழ்நாடு அரசு வழங்கிய தகைசால் தமிழர் விருது நிதி ரூ.10 லட்சத்தை தமிழ்நாடு அரசுக்கே வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டு எனக்கு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எனது சேவையை பாராட்டும் வகையில், அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக்கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விருதிற்காக அறிவிக்கப்படும் ரூ.10 லட்சம் தொகையினை கொவிட் 19 பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்தியநாட்டின் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன். சுரண்டலற்ற பொதுவுடைமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்ற்க்கொண்ட மார்க்சியக் கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு அறிவித்த ‘தகைசால் தமிழர்’ விருது தொகை ரூ.10 லட்சத்தை அவர் தமிழக அரசின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு அளித்திருப்பதை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“