2019-ம் ஆண்டில் பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் சுமார் ரூ.150 கோடி வரை முறைகேடு நடந்த விவகாரத்தில் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா சி.பி.சி.ஐ.டி போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். நர்மதாவுக்கு உதவிய அவரது சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளார். நர்மதாவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்காக ரூ. 190 கோடி செலவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.20.52 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி ஆர்.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் காரணமாக சிபிசிஐடி போலீஸார், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது இரு வழக்குகளைப் பதிவு செய்து 15 பேரை கைது செய்தனர். அந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோடிக்கணக்கில் போலியாக இழப்பீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்.ராஜேந்திரன், காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் பொன்னையா, முன்னாள் நில ஆர்ஜித சிறப்பு டி.ஆர்.ஓ கே.நர்மதா, சிறப்பு வட்டாட்சியர் மீனா, தேசிய நெடுஞ்சாலை ஆணையரக திட்ட இயக்குநர் பவன்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையம்மாள் ஆகியோருக்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
மன்னிப்பை ஏற்க மறுப்பு
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான முன்னாள் நில ஆர்ஜித சிறப்பு டி.ஆர்.ஓ-ம், தற்போதைய மதுரை ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்தின் ஆணையருமான கே.நர்மதா ஆஜராகி தனது செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்துள்ள தீர்ப்பில், போலியாக ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கூடாது. அந்த தொகையை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் நிரந்தர வைப்பீடாக செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும், அதை பொருட்படுத்தாமல் இழப்பீட்டுத் தொகையை இந்த அதிகாரி அவசர கதியில் வழங்கியிருப்பது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு செயல்.
அதிகாரிகளுக்கு வலுவான செய்தி
தற்போது ரூ. 20 கோடியில் ரூ. 18 கோடி திருப்பி வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறி, தனக்கு எதிரான அவமதிப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும், எனக் கோரியுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்கினால் மட்டுமே நீதித்துறை மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலைத்து இருக்கும். இல்லையெனில் மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவர். எனவே அதிகாரி கே.நர்மதாவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கிறேன் எனத் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பைக் கேட்டதும், அந்த அதிகாரி நீதிமன்றத்தில் மீண்டும் மன்னிப்பு கோரினார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இதுபோல நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளுக்கு வலுவான செய்தியைக் கூறும் வகையில் இந்த சிறை தண்டனை இருக்கும் என தெரிவித்து, மற்ற அதிகாரிகளுக்கு எதிரான அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து கே.நர்மதா தரப்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil