திமுக மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி திமுகவில் மிக அதிக எண்ணிக்கையில் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்கும் பணியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.
திமுக எம்.பி கனிமொழி சமீப காலமாக சமூக ஊடகங்களில், ஊடகங்களில், பொது நிகழ்ச்சிகளில் மிகவும் அளவாகவே கருத்து தெரிவித்து வருகிறார். அண்மையில், கனிமொழி, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களை அடுத்த தலைமுறையின் சிந்தனையை வடிவமைக்கும் திறன் கொண்டவர்கள் என்று புகழ்ந்துள்ளார். இளம் பெண்களை தனது தலைமையிலான திமுகவின் மளிரணியில் சேர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுகவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை உறுப்பினர்களாக சேர்ப்பதில், ஆளும் திமுகவின் இளைஞரணிக்கும் மகளிர் அணிக்கும் இடையே கடந்த பதினைந்து நாட்களாக ஒரு பெரிய போட்டியே நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 18ம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுகவில் அதிகபட்ச உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் மிக அதிகமான இளைஞர்களையும் இளம் பெண்களையும் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்கும் ஈடுப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், திமுகவில் அதிக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை உறுப்பினராக சேர்க்கும் இந்தப் போட்டியில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான இளைஞரணிக்கும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி தலைமையிலான மகளிரணிக்கும் இடையே யார் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது என்று கட்சியில் ஒரு ஆரோக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற திமுகவின் பிரமாண்ட விழாவில் நூற்றுக்கணக்கான இளம் பெண்களை கட்சியை நோக்கி அழைப்பதில் தீவிரமாக உள்ள கனிமொழி, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களை மகளிர் அணிக்கு அழைக்குமாறு தனக்கு கீழே உள்ள நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். சமீப ஆண்டுகளில், ட்வீட்கள், பொது நிகழ்ச்சிகளில், ஊடகங்களில் அளவாக பேசிய கனிமொழி, ஒரு அறிக்கையில், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களை அடுத்த தலைமுறையின் எண்ணங்களை வடிவமைக்கும் திறன் கொண்டவர்கள் என்று புகழ்ந்துள்ளார். மேலும், இளம் பெண்களை திமுகவில் தனது தலைமையிலான மகளிரணியில் சேருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“அரசியலில் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டுவது என்பது திமுகவின் அடிப்படை சமூக நீதிக் கொள்கையின் வெளிப்பாடாகும். நமது மகளிர் அணி அடுத்த தலைமுறைக்கு சுதந்திரமாக சிந்திக்கும் இளம் பெண் உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களைச் சேர்த்து, அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது” என்று கூறினார்.
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியின் அறிக்கை திமுக மகளிரணியை மட்டுமில்லாமல் இளைஞரணியையும் சுறுசுறுப்படைய வைத்துள்ளது. உதயநிதி திமுகவின் இளைஞரணி செயலாளராக பதவியேற்ற பிறகு இளைஞர் அணி வேகம் காட்டி வருகிறது. தற்போது, கனிமொழியும் திமுகவின் மகளிரணியின் செயல்பாட்டை முடுக்கி விட்டுள்ளார். இப்படி, திமுகவில் உதயநிதியின் இளைஞரணிக்கும் – கனிமொழியின் மகளிரணிக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி தொடங்கியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், “ஒரு கட்சியின் அணி சிறப்பாகச் செயல்பட்டால், அந்த அணியை தலைமை எப்படிக் கட்டுப்படுத்தும். எந்தவொரு கட்சித் தலைமையும் அதன் அணிகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை அகற்ற விரும்பாது. தேவைப்பட்டால், மற்ற அணிகளின் உரிமைகள் மற்றும் அதிகார மீறலைத் தடுக்க சில செக் வைக்கப்படலாம். கட்சியின் வளர்ச்சியும், நலனும் தான் முக்கியம்” என்று தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“