திருச்சியில் பள்ளி மாணவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை பள்ளியின் தாளாளர் அடிக்கும் காட்சிகள் செய்தி ஊடகங்களில் வெளியானது.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரை அவரது வீட்டிற்கு இரண்டு காவலர்களை அனுப்பி, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மிரட்டியதாக பொன்மலை காவல் உதவி ஆய்வாளர் வினோத் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், தற்போது வரை காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வினோத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்