திமுக எம்பி கனிமொழி குறித்து டிவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட புகாரில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள்து.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து, பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். அதற்கு, கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, கோவை மாவட்டம் கனியூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் (தி.மு.க) வேலுச்சாமி என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் கருமத்தம்பட்டி போலீஸில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஹெச்.ராஜா மீது 500, 501 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, ஈரோட்டிலும் நேற்று ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து ஹெச்.ராஜா பேசிய கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், அவருக்கு கிலி ஏற்படுத்துவதற்காகவே, புகார் அளித்து 4 மாதங்களுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்களில் கூறுகின்றனர்.