/tamil-ie/media/media_files/uploads/2023/07/vik.jpg)
விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் மீது லால்குடி டிஎஸ்பி இடம் புகார்
தமிழகத்தின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவரது பிறப்பிடம் லால்குடியை பூர்வீகமாக கொண்டிருந்ததால் அவர் திருச்சிக்காரர் என்றும், அவரது மனைவி நயன்தாரா திருச்சி மருமகள் என்றும் திரைத்துறை மற்றும் சமூக ஊடகங்களில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினர் வைரலாகினர். அவரது திருமணம் குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் சர்ச்சைகள் வலம் வந்தன.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் சித்தப்பா, பெரியப்பா ஆகியோர் லால்குடி டிஎஸ்பியிடம் புகார் ஒன்றை கொடுத்திருப்பது பேசும் பொருளாக அமைந்துள்ளது. இது குறித்து விவரம் வருமாறு;
திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து. இவர் உடன் பிறந்தவர்கள் 9 பேர். இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா லால்குடியில் மாணிக்கம் தனது மனைவி பிரேமா உடன் வசித்து வருகிறார். கோயம்புத்தூரில் சித்தப்பா குஞ்சிதபாதம் தனது மனைவி சரோஜா உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சித்தப்பா குஞ்சிதபாதம் மற்றும் பெரியப்பா மாணிக்கம் ஆகியோர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
இந்த புகார் மனுவில் எங்களுக்கே தெரியாமல் எங்கள் தம்பி சிவக்கொழுந்து சொத்தை ஏமாற்றி விற்றதாகவும் அதில் பல வில்லங்கங்கள் உள்ளதாகவும் கூறினார். மேலும், எங்கள் பொது சொத்தை விற்று கிரைய பத்திரத்தில் மிகத் தெளிவாக மேற்படி நிலத்தில் பிற்காலத்தில் ஏதேனும் வில்லங்கம் ஏற்பட்டால் தன்னுடைய சொத்து அல்லது தன் வாரிசுகளின் சொத்துக்களின் மூலமாக வில்லங்கத்தை ஈடு செய்வதாக உறுதி கூறி அந்த நிலத்தை விற்பனை செய்து உள்ளார்.
எனவே மோசடியாக பொது சொத்தை விற்ற சிவக்கொழுந்துவின் வாரிசுகளான அவர் மனைவி மீனாகுமாரி மகன் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள் மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நிலத்தை வாங்கியவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தி நிலத்தை மீட்டு முழுமையாக எங்களுக்கு கிடைக்க அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் எனவும் அவர்கள் மீது கிரிமினல் மோசடி வழக்கு தொடர குற்றப்பதிவு செய்ய வேண்டும் எனவும் மனுவில் கூறி இருந்தார்.
இது குறித்து சித்தப்பா குஞ்சிதபாதத்திடன் கேட்ட பொழுது கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், தனக்கு இருதயத்தில் நான்கு குழாய்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தியதாகவும், இதனால் ஏழ்மை நிலையில் உள்ள தன்னிடம் அறுவை சிகிச்சை செய்ய போதிய வசதி இல்லாததால் லால்குடியில் வசித்து வரும் தனது அண்ணன் மாணிக்கத்திடம் தனது குடும்ப சொத்தில் தனக்கு சேர வேண்டியதை விற்று உதவிடுமாறு கேட்டுள்ளார் ஆனால் சொத்தை விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து முறைகேடாக அண்ணன்கள் மற்றும் தம்பிகளை ஏமாற்றி விட்டதாகவும் இது குறித்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பாகி சொத்தில் ஒரு பங்கு மட்டுமே சிவக்கொழுந்துக்கு உரிமை உண்டு எனவும் மீதி பங்குகள் எட்டு பேருக்கும் உரியது என தீர்ப்பு வந்துள்ளதாக மாணிக்கம் தெரிவித்ததாகவும், மேலும் இந்த வில்லங்கத்தை தீர்க்க விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனாகுமாரி ஆகியோர் உதவினால் மட்டுமே வில்லங்கம் தீரும் என கூறியதாக தெரிவித்தார். மேலும், தன் உடல் நிலையை கருத்தில் கொண்டு விரைவில் இருதய அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் தங்களுக்கு விக்னேஷ் சிவன் சொத்தை விற்க உதவிடுமாறு கூறினார்.
மேலும் இதுகுறித்து விக்னேஷ் சிவனின் சித்தி சரோஜா கூறுகையில், எனது கணவர் குஞ்சரபாதம் உடல்நிலை சரியாமல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார் எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை எங்களுக்கு குழந்தைகளும் இல்லை விக்னேஷ் சிவனின் சித்தி என்ற முறையில் கேட்பதாகவும் எனது கணவரை காப்பாற்றி தர சொத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.