மதுரை மாநகராட்சியின் மண்டல குறைதீர்க்கும் கூட்டத்தில், குடிநீர் விநியோகம் தொடர்பாக வார்டு உறுப்பினர் ஒருவர் எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேயர் இந்திராணி பொன்வசந்திடம் வார்டு 58 உறுப்பினர் எம்.ஜெயராம் (திமுக) அளித்த மனுவில், "வார்டில் மக்களுக்கு வழங்கப்படும் மாநகராட்சி குடிநீர் சேறும் சகதியுமாக, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 3 மாதங்களாக பலமுறை புகார் அளித்தும், இந்த பிரச்னை தீர்க்கப்படவில்லை. மக்களின் நலன் கருதி, பல இடங்களில் உள்ள குடிநீர் குழாய்களை நாங்களே சொந்த செலவில் சரிபார்த்தும், மாசுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. குழாய்களில் இருந்து தண்ணீர் சேகரிக்கும்போது வடிகட்டிகள் பயன்படுத்தினாலும், தண்ணீர் மிகவும் சேறும் சகதியுமாக இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது" என்று குறிப்பிட்டு, கூட்டத்தில் குடிநீரை பாட்டிலில் எடுத்து வந்து காண்பித்தார். மேலும், வார்டு 58-ல் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "முதற்கட்ட அறிக்கைகளின்படி, தண்ணீரில் செம்மண் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த பிரச்னையை கண்டறிந்து தீர்வுகாண இன்று அந்த பகுதியில் விரிவான விசாரணை நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.