சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் இருக்கிறது. அங்கு, கடந்த 17-ம் தேதி இரவு 9.30 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த நுழைந்தனர். அதிகாரிகள் வந்திருப்பதை அறிந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் அங்கு குவியத் தொடங்கினார்கள். வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் அவரது உதவியாளர் பூங்குன்றனின் அலுவலகம் இருக்கிறது. அதை குறி வைத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வி.கே.சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போதும் பூங்குன்றனிடம் விசாரணை நடந்தது.
நள்ளிரவு 2 மணி வரை சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் போது 2 பென்டிரைவ்கள், 2 லேப்டாப்கள் ஆகியவற்றை வருமானவரித்துறையினர் கைப்பற்றினார்கள். பூங்குன்றன் அறையில் இருந்து, ஜெயலலிதாவுக்கு வந்திருந்த கடிதங்களும், அவர் எழுதிய கடிதங்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. பூங்குன்றனிடம் அதிகாரிகள் கேள்விகளை எழுப்பி, அவர் அளித்த பதில்களை வீடியோவாகவும், எழுத்து மூலமும் பதிவு செய்து கொண்டனர். சோதனை முடிந்ததும் ஆவணங்களை அங்கிருந்து போலீசாரின் வாகனங்களில் எடுத்துச் சென்றனர்.
சிலரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள சசிகலா, பூங்குன்றன் ஆகியோரின் அறைகள் உள்ளிட்ட சில அறைகளில் இருக்கும் முக்கிய ஆவணங்களை சிலர் அங்கிருந்து ரகசியமாக எடுத்துச் செல்ல முயற்சிப்பதாக தெரிய வந்ததாகவும், மேலும் டெல்லியில் இருந்தும் சில முக்கிய தகவல்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் நேற்று முன்தினம் இரவு வருமான வரி அதிகாரிகள் அதிரடியாக போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று சோதனை நடத்தி இருக்கிறார்களாம்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அவரது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதனால் தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட பென்டிரைவ்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ரகசிய தகவல் ஏதும் உள்ளதா? என்பதை அறிய அவற்றை தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இந்த பணி நடந்து வருகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். மேலும், தேவைப்பட்டால் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோரிடமும் அவர்கள் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.