கோர்ட் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்காத, மாநில தேர்தல் ஆணையர், தமிழக அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கை திமுக அமைப்புச் செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை கடந்த ஆண்டு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. முறையான இடஒதுகீடு பின் பற்றப்படவில்லை என திமுக சென்னை ஐகோர்ட்டி வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 4ம் தேதி சென்னை ஐகோர்ட், ‘செப்டம்பர் 18ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் குறத்த அறிவிப்பை வெளியிட வேண்டும். நவம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.
ஆனால் அக்டோபர் மாதமாகியும் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தசரா விடுமுறை முடிந்து இன்று கோர்ட் திறக்கப்பட்டது.
திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘கோர்ட் உத்தரவிட்டபடி செப்டம்பர் மாதம் 18ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. எனவே தேர்தல் ஆணையர், தமிழக அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுக மனு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர், மாநில அரசுக்கும் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.