தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி இந்தாண்டில் 6-வது முறையாக பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 9) தமிழ்நாடு வருகிறார். 2 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் மோடி பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். பிரதமரின் பயணத் திட்டத்தின் படி கேரள மாநிலம் பாலக்காட்டில் நாளை தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு மாலையில் சென்னை வருகிறார். சென்னை தியாகராயர் நகரில் பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி (ரோடு ஷோ) மேற்கொள்கிறார்.
இந்த தேர்தல் பரப்புரையின் போது தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி. செல்வத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து அன்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
தொடர்ந்து மறுநாள் காலை வேலூரிலும் மற்றும் பிற்பகல் மேட்டுப்பாளையத்தில் நீலகிரியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை ஆதரித்தும் பரப்புரையில் ஈடுபட உள்ளார். இந்தநிலையில் நாளை சென்னையில் நடைபெற உள்ள பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
பிரதமரின் ரோடு ஷோவுக்கான நிபந்தனைகள்
- பிரதமரின் ரோடு ஷோவின்போது தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது.
2. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்ப தடை விதிப்பு
3. பிரதமரின் ரோடு ஷோவின்போது உரையாற்றவும் அனுமதியில்லை
4. மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையிலும் வெறுப்புணர்வு தூண்டும் வகையிலும் முழக்கங்கள் எழுப்ப தடை
5. குண்டு துளைக்காத வாகனங்களை மட்டுமே பிரதமர் ரோடு ஷோவில் பயன்படுத்த வேண்டும்
6. பிரதமரின் ரோடு ஷோவில் பேனர், கட் அவுட்டுகள் உள்ளிட்டவற்றை வைக்கக் கூடாது என கண்டிப்பு
7. ரோடு ஷோவில் பங்கேற்பவர்கள் எந்த பதாகையையும் ஏந்திச் செல்லக்கூடாது
8. அனுமதிக்கப்பட்ட பாதையில் ரோடு ஷோ மட்டுமே நடத்த வேண்டும்; வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது.
9. நிபந்தனைகள் மீறப்பட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“