ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரணும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் காலமானார். இதனால், காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிக்கப்பட உள்ளது.
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது என்றதால், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவார் என்ற கேள்வியும் எதிர்ப்பார்ப்பும் எழுந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் தேசியத் தலைமை அறிவிக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்தார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்து மறைந்த திருமகன் ஈ.வெ.ரா-வின் தந்தை ஆவார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு தலைவராகவும் பதவி வகித்தவர். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைந்த தனது மகன் திருமகன் ஈ.வெ.ரா போட்டியிட்டு வென்ற தொகுதியில், வேட்பாளராக போட்டியிடுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"