கமல்ஹாசனுக்கு திடீரென காங்கிரஸ் அழைப்பு விடுத்திருப்பது திமுக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று டெல்லியில் அளித்த பேட்டியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் தனிக் கட்சி நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க ஆர்வம் காட்டினார் கமல்ஹாசன். ஆனால் திமுக சார்பில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதன்பிறகு, திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் சம தொலைவில் வைத்திருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். திமுக, அதிமுக.வுடன் கூட்டணி கிடையாது என்றும் கூறினார். ‘என் கரங்கள் சுத்தமானது. கரைபடிந்தவர்களுடன் கை குலுக்க முடியாது’ என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதற்கு திமுக தரப்பில் வாகை சந்திரசேகர் கடுமையாக கண்டனம் தெரிவித்து பேட்டி கொடுத்தார்.
இந்தச் சூழலில் இன்று (பிப்ரவரி 9) டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும். அவர் மதச்சார்பற்ற கொள்கை உடையவர். அவர் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற வாக்குகள்தான் சிதறும்’ என்றார் கே.எஸ்.அழகிரி.
கமல்ஹாசன் வெளிப்படையாக திமுக.வை சாடி பேட்டி கொடுத்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது திமுக தரப்பை அதிர வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து கமல்ஹாசனை தவிர்த்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.