காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
"ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சட்டப்பேரவையில் நடந்துகொண்ட அநாகரீகமான செயலை கண்டித்து, தனிநபர் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி கொடுத்திருக்கிறது.
நாளை, அந்த தனிநபர் தீர்மானத்தை பேரவைத்தலைவர் எடுக்கவேண்டும் என்று நாங்கள் கூறியிருக்கிறோம்.
இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு அநாகரீகமான ஆளுநரை, எந்த ஆளுநர் மாளிகையும் பார்த்ததில்லை. ஐ.பி.எஸ்., படித்து பல பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று வந்தவர், இப்படி நடக்கிறார் என்றால், இவருக்கு எங்கிருந்து ஆணைகள் வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்துடன் வளர்ந்திருக்கும் ஆர்.என்.ரவி, அவர் காவல்துறை அதிகாரியாக இருக்கும் பொழுது எப்படி செயல்பட்டிருப்பார், மக்களை எப்படி பழிவாங்கியிருப்பார் என்பதை நேற்றைய நடவடிக்கை காட்டுகிறது.
அவர் ஹிந்துத்துவ அரசியலை பேசட்டும். ஹிந்துத்துவவை தூக்கி பிடிக்கட்டும். ஆர்.எஸ்.எஸ்., பிரச்சார பீரங்கியாக இருக்கட்டும். ஆனால், அரசியல் அமைப்பின்பால் அந்த சட்டத்தின் மீது, பதவி ஏற்றவுடன் அவர் இதை செய்கிறார் என்றால் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நரேந்திர மோடி இந்தியா அளவில் என்ன செய்கிறாரோ, அவரது வாரிசாக இருக்கின்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் அவருடைய பண்பாட்டை, அவருடைய நாகரீகத்தை காட்டி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாத ஒரு புதிய மோசமான கலாச்சாரத்தை புகுத்தியிருக்கிறார். இந்தியாவில் இந்தியர்களாக இருக்கின்ற அனைவரும் தேசிய கீதத்தை மதிப்பவர்கள். தேசிய கீதத்திற்கு மதிப்பளித்து தேசிய கீதம் முடிந்தவுடன் தான் நிகழ்ச்சியை முடிப்பார்கள்.
ஆனால், சாதாரண பள்ளிக்கூட குழந்தைகளுக்கு தெரியும் விஷயம் கூட ஆளுநராக இருப்பவருக்கு ஏன் தெரியவில்லை. தமிழக மக்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வேண்டும். ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்ப பெறவேண்டும். இப்படி வரலாற்றிலேயே ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தி இருக்கிறார்", என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil