தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக மக்கள் மற்றும் மாநில நலன்களுக்கு எதிராக அவர் இழைத்த துரோகங்களைக் கண்டிக்கும் விதமாக இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி மற்றும் திருச்சிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிறார் என்பதை உறுதிப்படுத்தினார். அப்போது அவர், "பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் நலனைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். அடுத்த தலைமுறையை உருவாக்கும் பள்ளி கல்வித்துறைக்குக் கொடுக்க வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்" என்று குற்றம் சாட்டினார்.
தமிழ் மொழியின் செழுமை மற்றும் வரலாறு குறித்துப் பேசிய அவர், "தமிழ் மொழி நீண்ட நெடிய பாரம்பரியம், வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகின் மூத்த மொழியாகத் திகழ்கிறது. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் தமிழ் மற்றும் திருக்குறளின் சிறப்புகளை எடுத்துரைத்துப் புகழ்ந்து பேசி வருகிறார். ஆனால், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த உண்மையான அறிக்கையை மாற்றி எழுதித் தரும்படி அமர்நாத் ராமகிருஷ்ணனுக்குத் தொந்தரவு கொடுத்துள்ளார். தமிழகத்தின் உண்மையான வரலாற்றை வெளியிட மறுக்கிறார்" என மத்திய அரசின் இரட்டை நிலைப்பாட்டைக் கடுமையாகச் சாடினார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததையும் செல்வப்பெருந்தகை சுட்டிக்காட்டினார். "தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த பிறகு மூன்று தேர்தல்களைச் சந்தித்துள்ளார். இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசே நிதி ஒதுக்குகிறது. ஆனால், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஜப்பானிடம் கடன் வாங்குகிறது. இவை அனைத்தையும் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இறுதியாக, மறைந்த பிரதமர் இந்திரா காந்தியைப் பாராட்டிய செல்வப்பெருந்தகை, "இந்திரா காந்தி ஒரு நாள் பிரதமராக இருந்தாலும், நாட்டு மக்கள் நலனுக்காகவும், நாட்டுக்காகவும் உயிர் தியாகம் செய்துள்ளார். இந்திரா காந்தி இரும்புப் பெண்மணி என உலக நாடுகள் போற்றிப் பேசியது. அதிக நாட்கள் தொடர்ந்து பிரதமராக இருந்து மோடி அப்படி என்ன தியாகம் செய்துவிட்டார்?" என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸார் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, திருச்சி, தூத்துக்குடி பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், திருச்சி காங்கிரஸார் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த பெரிதான முயற்சிகளை எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை என்று காங்கிரஸ் கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்