மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குப்பதிவு நாளுக்கு குறுகிய காலமே இருப்பதால், அரசியல் கட்சிகள் கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்கி வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக உள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி 1 இடம் என மொத்தம் 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க முதலில், காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளையே அளிப்பதாகக் கறாராகக் கூறினாலும், இறுதியில் தாராளமாகவே தொகுதிகளை வழங்கியுள்ளது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியாகி உள்ளது. அதில், கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் 7 தொகுதிகளும், கடலூர் மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய 3 தொகுதிகள் புதியதாக அறிவிக்கபட்டுள்ளன.
இந்த மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு, கடலூர் மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய 3 தொகுதிகளை புதிதாக அளித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு தொல்வி அடைந்த தேனி மற்றும், வெற்றி பெற்ற தொகுதிகளான திருச்சி, ஆரணி ஆகிய தொகுதிகள் உள்பட 3 தொகுதிகள் இந்த 2024 மக்களவைத் தேர்தலில் மாற்றப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலைவிட கூடுதலாக 1 தொகுதி என தமிழ்நாடு புதுச்சேரி என 10 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதில், திருவள்ளூர் (தனி) தொகுதில் சசிகாந்த் செந்தில் அல்லது முன்னாள் எம்.பி விஸ்வநாதன் போட்டியிட வாய்ப்பு உள்ளது. கடலூர் தொகுதியில் கே.எஸ். அழகிரி, மயிலாடுதுறை தொகுதியில் பிரவீன் சக்ரவர்த்தி, திருநாவுக்கரசர் அல்லது சரண்யா ஐயர் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., திருநெல்வேலி பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணகிரி செல்லக்குமார் எம்.பி, கரூர் தொகுதியில் ஜோதிமணி எம்.பி, விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் எம்.பி, கன்னியாகுமாரி தொகுதியில் விஜய் வசந்த் எம்.பி, புதுச்சேரியில் வைத்திலிங்கம் எம்.பி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தெரிவிக்கின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் திருநாவுக்கரசு, இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், திருச்சி தொகுதி தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க-வுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் திருநாவுக்கரசு வேறு ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருநாவுக்கரசர், மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட விரும்புவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் போட்டி உள்ளதால், திருநாவுக்கரசர் சீட் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனென்றால், காங்கிரஸ் தேசியத் தலைமையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும், பிரவீன் சக்ரவர்த்தி, மணிசங்கர் ஐயரின் மகள் சரண்யா ஐயர் இருவரும் ஆர்வமாக உள்ளதால் மயிலாடுதுறை தொகுதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதே போல, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, கரூர், ஆரணி ஆகிய தொகுதிகளில் ஏற்கெனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் போட்டியிடக் கூடாது, அப்படி போட்டியிடுவது என்றால் அந்த தொகுதியை தி.மு.க-விடம் கொடுத்துவிடுங்கள் என்று தி.மு.க கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம், இந்த தொகுதிகளில் சிட்டிங் எம்.பி-யாக இருப்பவர்கள் மீது நிலவும் அதிருப்தி குறித்து தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்ததே காரணம் என்று வட்டாரங்கள் தெரிவிகின்றன. இதனால், கரூர் தொகுதியில் போட்டியிட ஜோதிமணிக்கு மீண்டும் சீட் கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எப்படியானாலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி மார்ச் 20-ம் தேதிக்கு முன்னதாக வேட்பாளர்கள் பட்டியல் முழுமையாக வெளியாகும். அப்போது, திருநாவுக்கரசர் மற்றும் ஜோதிமணி இருவரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பது தெரிந்துவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.