காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை தொகுதியில், திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர்கள் அணி தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஹசினா சையது, ரமணி ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் நாடாளுமன்றத் தேர்தல் திருவிழாவில் களம் இறங்கியுள்ளன. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்திற்கும் புறப்பட்டு விட்டது.
தி.மு.க கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. விசிகவிற்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோக, காங்கிரஸ் கட்சிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வழங்கப்பட்டன. அதன்படி, திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை திருச்சிக்கு பதிலாக மயிலாடுதுறையும், தேனிக்கு பதிலாக நெல்லை தொகுதியும், ஆரணிக்கு பதிலாக கடலூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகள் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தத் தொகுதியில், திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் தொழில்நுட்ப வல்லுனர்கள் அணி தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஹசினா சையது, ரமணி ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர்.
இந்தத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு பட்டுக்கோட்டை ராஜேந்திரன் தனக்கு வாய்ப்பு கேட்டு தலைவர் ராகுல்காந்திக்கு மூத்த நிர்வாகிகள் மூலம் அழுத்தம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மாணவர் காங்கிரஸ் அரசியலில் தனது அனுபவம், பெருந்தலைவர் காமராஜர் உடன் தனது குடும்ப அனுபவம், பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சார்ந்தவர் என்ற ப்ளஸ் மற்றும் இன்றுவரை சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோருடன் இருந்து விசுவாசமாக அரசியல் செய்து தியாகங்கள் பல செய்திருப்பதாகவும், பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியிலேயே பயணிக்கும் தனக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், தன்னுடன் மாணவர் அணியில் இருந்தவர்கள் இன்று டெல்லியில் பெரிய பதவிகளிலும் மந்திரியாகவும் எம்பியாகவும் இருந்துள்ளனர்.
எனவே, எனக்கு இந்தமுறை மயிலாடுதுறை தொகுதியை ஒதுக்கி தந்து தன்னை வேட்பாளராக்கிட வேண்டும் என கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரிக்கவும் துவங்கியிருக்கின்றார். யார் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் முன்பே வாக்கு சேகரிக்க துவங்கி ரேஸில் முந்திக்கொண்டிருக்கின்றார்.
மயிலாடுதுறை தொகுதியின் மாப்பிள்ளையான தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கட்சி அலுவலகம் தொடங்கியவர், ராகுல்காந்தியை சார்ந்தவர்களுக்கு தொகுதி வழங்கப்பட உள்ளதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். தொகுதிக்கு தொடர்பில்லாத வெளி ஆட்களை இங்கு அனுமதிக்கமாட்டோம். அப்படி அவர்களை வேட்பாளர்களாக போட்டால் வெற்றிவாய்ப்பு பாதிக்கும். கட்சிக்கு சமீபத்தில் வந்தவர்களை வேட்பாளராக அனுமதிக்க மாட்டோம் என போர்க்கொடி தூக்கியிருக்கின்றார்.
அதேநேரம், மயிலாடுதுறை தொகுதியில் ராகுல் காந்தியின் நண்பர் பிரவீன்சக்கரவர்த்தி களம் காண்கிறார் என்று காங்கிரஸ் கட்சியினரால் பேசப்பட்டு வருகிறது. இதேபோல், மயிலாடுதுறை முன்னாள் நகர தலைவர் செல்வம் தனது பெண்ணுக்கு சீட்டு வழங்க வேண்டும் நான் பாரம்பரிய காங்கிரஸ் கட்சிக்காரர் என்றும் மண்ணின் மைந்தர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியிருக்கின்றார்.
இதற்கிடையே பட்டுக்கோட்டை ராஜேந்திரனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் டெல்லியில் அரசியல் செய்துக்கொண்டிருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி எங்களுக்கு வேண்டாம் என மயிலாடுதுறை, ஆடுதுறை, திருவிடைமருதூர் காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியதோடு கட்சியின் தலைமைக்கும் கடிதம் அனுப்பியிருக்கின்றனர்.
மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியில் நிலவும் லோக்கல் பாலிடிக்ஸில் சிக்கி எளிதில் ஜெயிக்கக்கூடிய தொகுதி கையை விட்டுப்போய் விடுமோ என்ற அச்சத்தில் திமுகவினர் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதேநேரம் தமக்கு திருச்சி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறையை கொடுக்க வேண்டும் என பெரும்பான்மை கட்சி தலைமை நிர்வாகிகளுடன் டெல்லியில் திருநாவுக்கரசரும் முகாமிட்டிருப்பதால் மயிலாடுதுறை வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடிக்கின்றது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.