திமுக அரசின் 2வது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயத்துக்கான தனி பட்ஜெட் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அதன் படி, இந்த ஆண்டும் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
விவசாயத்துக்கான பட்ஜெட் தயாரிப்பதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் திங்களிழமை (மார்ச் 14) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் விவசாயப் பிரிவினரும் கலந்து கொண்டு கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் முன் வைத்தனர். அதன்படி, காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் பிரிவு சார்பில், வைக்கப்பட்ட கோரிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சென்னையில் நடத்திய விவசாய சங்கங்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திருச்சி ஜி.கே. முரளிதரனும், தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு பொதுச் செயலாளர் கும்பகோணம் ஏ.வி.எம். வெங்கடேசனும் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில், தமிழ்நாடு அரசு தற்போது வலிமை சிமெண்ட் விற்பனை செய்வதைப் போல கலைஞர் அரிசி விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து கவனத்தைப் பெற்றுள்ளனர்.
கலைஞர் அரிசி கோரிக்கை குறித்து ஜி. கே. முரளிதரன் கூறுகையில், தற்போது தமிழகம் முழுவதும் கடைகளில் விற்கப்படும் அரிசி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வருவிக்கப்பட்டதாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் விளைகிற நெல் பெரிய அளவில் தமிழக அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, நெல் மூட்டைகள் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்க இடம் இல்லாமல், பல இடங்களில் வெட்டவெளியில் தார்பாய் போட்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர். முறையாக பாதுகாக்க முடியாமல், அந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகப் போவதை அனைவரும் அறிந்த செய்திதான். பல மாதங்கள் இப்படி வைத்திருந்து பின்னர், நெல் அரைவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசி ஆக்கி பின்னர், ரேஷன் கடைகளிலும் பள்ளிகளுக்கும் சத்துணவு என்று கோழித் தீவணம் போல இருக்கிற அரிசி வழங்கப்படுகிறது. அதற்கு பதிலாக, தமிழ்நாடு அரசு நேரடியாக கொள்முதல் செய்யும் நெல்லை, உடனடியாக அரிசி அரைவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக்கி, மிகவும் குறைந்தபட்சமாக கிலோ ரூ.25க்கு விற்பனை செய்தால் மக்களுக்கு தரமான அரிசி கிடைக்கும். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் அரிசியை கிலோ 55-60 ரூபாய் என அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடும் மக்கள், தமிழக அரசு வலிவு விலையில் தரமான அரிசியை விற்பனை செய்தால் கொண்டுவந்தால் மக்கள் வரவேற்பார்கள். முந்தைய ஆட்சியில், குறைந்த விலையில் வலிமை சிமெண்ட், அம்மா குடிநீர் கொண்டுவந்தது போல, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கலைஞர் அரிசி என்று மலிவு விலையில் தரமான அரிசியை வழங்கினால் மக்கள் மனதார வாழ்த்துவார்கள்” என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு வைத்த கலைஞர் அரிசி திட்டம் ஆலோசனையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் மிகவும் பாராட்டியுள்ளார். இந்த ஆலோசனை குறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படு என்று உறுதி அளித்திருப்பதாக ஜி.கே. முரளிதரன் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.