தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் நடைபெற்றதால் அப்பகுதி பரபரப்பானது. இந்த மோதலில், 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியினர் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலும், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் முன்னிலையிலும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 15) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலொசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை புரிந்தனர். தற்போது, காங்கிரஸ் கட்சியில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருக்கும் கே.பி.கே ஜெயக்குமார் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 8 ஒன்றியத் தலைவர்களை காரணம் இல்லாமல், பதவி நீக்கம் செய்து அவருடைய ஆதரவாளர்களை புதிய நிர்வாகிகளாக நியமித்ததாக குற்றம் சாட்டி நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் திடீரென முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, சத்தியமூர்த்தி பவன் வந்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னணி தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் மற்றும் மேலிட
பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் சத்தியமூர்த்தி பவன் உள்ளே வரும்போது, போராட்டக்காரர்கள் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருக்கும் கே.பி.கே ஜெயக்குமாருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரை மாற்றம் செய்ய
வேண்டும் என கே.எஸ். அழகிரியிடம் மனு அளிக்கப்பட்டது. தலைவர் கே அழகிரி மற்றும் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் முடியும் நிலையில், கே.எஸ். அழகிரி புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் திடீரென சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது, அருகில் இருந்த பைப் மற்றும் கற்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தி அது அடிதடியாக மாறியது.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த இந்த திடீர் மோதலில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளான ராபர்ட், ஜோஸ்வா மற்றும் டேனியல் ஆகிய 3 பேருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனால், அங்கே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“