காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகாராஷ்டிராவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ராஜ்ய சபா எம்.பி பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், ப. சிதம்பரம் தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் இருந்து 6 ராஜ்ய சபா இடங்கள் காலியானதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வருகிற ஜூலை 10 ஆம் தேதி 6 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தலை அறிவித்துள்ளது. இதில் திமுக கூட்டணிக்கு 4 ராஜ்ய சபா இடங்கள் கிடைக்கும் என்பதால், திமுக 3 ராஜ்ய சபா இடங்களுக்கு தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், ஆர். கிரிராஜன் ஆகிய 3 பேர்களையும் வேட்பாளர்களை அறிவித்தது. மேலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 1 ராஜ்ய சபா எம்.பி இடத்தை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 1 ராஜ்ய சபா ஒதுக்கீடு செய்யப்பட்டதுமே, தமிழகத்தில் இருந்து தேர்வாகி ராஜ்ய சபாவுக்கு எம்.பி-யாக செல்லப்போகும் காங்கிரஸ் தலை யார் என்று கேள்விகளும் எதிர்ப்பார்ப்புகளும் எழுந்தன.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு 2 ராஜ்ய சபா இடங்கள் கிடைக்கும். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்து குறித்து இன்னும் ஆலோசனை நடத்தி வருகிறது. அதிமுகவின் 2 ராஜ்ய சபா இடங்களில் 1 இடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதாரவாளருக்கும் மற்றொரு இடம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருக்கும் அளிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ராஜ்ய சபா எம்.பி தேர்தலுக்கு பிறகு, மாநிலங்களவையில் திமுகவின் பலம் 10 எம்.பி.க்களாகவும், அதிமுக எம்.பி.க்களின் எண்ணிக்கை 4 ஆகவும் மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக கட்சிகளுக்கு தலா 1 எம்.பி.க்கள் இருப்பார்கள். இதில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இருந்து ஒரு எம்.பி.யை ராஜ்ய சபாவுக்கு அனுப்ப உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு ராஜ்ய சபாவுக்கு மொத்தம் 18 எம்.பி.க்களை அனுப்புகிறது.
இதற்கு முன்னர், 2016 இல் தமிழக காங்கிரஸில் இருந்து சுதர்சன நாச்சியப்பன், ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டார். அவருடைய பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை அனுப்புகிறது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அந்த இடத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரத்தின் பெயர் முன்னணியில் உள்ளது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், ஒரு காலத்தில் ப. சிதம்பரத்தின் ஆதரவாளராக இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியும் போட்டியில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், “மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட ப. சிதம்பரத்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலையில் முடிவடைகிறது. தமிழ்நாட்டி 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், இந்த முறை தனது சொந்த மாநிலத்தில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக கோரியுள்ளார். 1 ராஜ்ய சபா இடத்துக்கு தமிழக காங்கிரஸில் ப. சிதம்பரம் மட்டுமல்லாமல், கே.எஸ். அழகிரி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் டேட்டா அனலிட்டிக்ஸ் பிரிவின் தலைவர் பிரவின் சக்ரவர்த்தி உள்ளிட்ட 4 பேர் போட்டியில் உள்ளனர்” என்று தெரிவிக்கின்றனர்.
கே.எஸ்.அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கே.எஸ். அழகிரி போட்டியிடுவதில் இருந்து விலகியதைக் குறிப்பிட்டு, தனக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியை கோரியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “கே.எஸ். அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுவார். அவர் தன்னுடைய பெயரை ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என கருதுகிறார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கமிட்டி தலைவராக சிறப்பாக செயல்பட்டதற்கான அங்கீகாரமாக அவர் தனக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி வழங்க வேண்டும் என விரும்புகிறார்.” கூறினார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1 ராஜ்ய சபா இடத்துக்கு, காங்கிரஸ் தேசியத் தலைமை தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மாநிலங்களவையில் பாஜகவை எதிர்கொள்ள ப. சிதம்பரம் ராஜ்ய சபாவில் தான் இருக்க வேண்டும் என்று கருதினால் ப. சிதம்பரம் ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் வட்டாரஞ்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு புறம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒரு பிரிவினர், ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே மக்களவையில் சிவகங்கை தொகுதி எம்.பி-யாக இருப்பதால், ப. சிதம்பரம் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு தேர்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 1 ராஜ்ய சபா இடத்துக்கு, பலரும் போட்டியில் உள்ளனர். அதில், ப. சிதம்பரத்தின் பெயர் முன்னிலையில் உள்ளது. ஆனாலும், யாருக்கு அந்த 1 இடம் என்பதை காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.