திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்து யதார்த்த அணுகுமுறையில் இருக்கும் என்றும் பேரம் இருக்காது என்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் செவ்வாய்க்கிழமை கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் இடங்களையும் அங்கே வலுவாக உள்ள நல்ல வேட்பாளர்களையும் அடையாளம் காணும் பணியைத் தொடங்கியுள்ளது. நாங்கள் அதை முக்கியமான நடைமுறை கோணத்தில் பார்க்கிறோம். தொகுதிக்கு தொகுதி உள்ள எதார்த்தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மற்ற விசயங்களைவிடக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்.
பீகார் தேர்தல் முடிவுகள் எங்களைப் பாதிக்காது. தமிழகத்தின் அரசியல் களம் வேறானது. திமுகவுடனான எங்கள் கூட்டணி ஏற்கனவே இங்கே பரிசோதிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருக்கிறோம். பீகாரில் மக்களவைத் தேர்தலில் எங்களுடைய கூட்டணி படுதோல்வியடைந்தது. அனால், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அலை வெற்றி பெற்றது. இந்த கூட்டணி களத்தில் சிறப்பாக செயல்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்றது. அது மேலும் தொடரும்.
வாக்கு வித்தியாசம் குறையும் போது திமுக மற்றும் தோழமை கட்சிகளுக்கு வலுவூட்ட காங்கிரஸ் கட்சியால் முடியும். கடும் போட்டி நிலவும் 100க்கு மேலான தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவியாக இருப்போம்.” என்று கூறினார்.
தற்போதைய சூழ்நிலை தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள தினேஷ் குண்டு ராவ், “தொகுதி பங்கீட்டில் கட்சி யதார்த்தமாக இருக்கும். தொகுதி பங்கீடு ஏற்பாடு ஒரு யதார்த்தமான அணுகுமுறையில் இருக்கும். காங்கிரஸின் பலம் மற்றும் கட்சிகளின் வாக்கு வங்கிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். நாங்கள் எங்கள் கூட்டணி கசிகளை சமாதானப்படுத்த முயற்சிப்போம். நியாயமான மற்றும் வெளிப்படையான கலந்துரையாடலை மேற்கொள்வோம். தேவையற்ற பேரம் இருக்காது.” என்று அவர் கூறினார்.
தினேஷ் குண்டு ராவ மேலும் கூறுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களவை தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்தார். அவரை முதல்வராக்க காங்கிரஸ் பணியாற்றும் என்று கூறினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி வருவார். கட்சி அவருக்காக ஒரு விரிவான திட்டத்தில் வேலை செய்து வருவதாகவும், தற்போது திட்டங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தினேஷ் குண்டு ராவ் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.