காங்கிரஸ் நிர்வாகி, ஜெயக்குமார் எழுதிய 2 கடிதங்கள் வெளியாகி உள்ளது.இந்நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் கே.பி.கே ஜெயக்குமார் . இவர் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பாக காணவில்லை, கண்டுபிடித்து தர வேண்டுமென அவரது மகன் உவரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் அருகில் உள்ள தோட்டத்திலேயே ஜெயகுமார் உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இந்நிலையில் தற்போது தனது மருமகனுக்கு 27ம் தேதியில் ஜெயக்குமார் எழுதிய கடிதம் ஒன்றும், 30ம் தேதி தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதம் என மேலும் 2 கடிதம் வெளியாகி உள்ளது. அதில் மருமகன் ஜெபாவுக்கு என் மீது கொண்ட பாசத்தாலும் நான் உன் மீது கொண்ட நம்பிக்கையாலும் இந்த கடிதத்தை உனக்கு எழுதுகிறேன் வர வேண்டிய கொடுக்க வேண்டிய பணங்களை குறிப்பிடுகிறேன் என 16 பேரின் பெயரை குறிப்பிட்டு எழுதி உள்ளார். குறிப்பாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ 78 லட்சம், கே.வி தங்பாலு 11 லட்சம் ஆக மொத்தம் 89 லட்சம் வழக்கு தொடர்ந்து வாங்க வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் என வாங்க வேண்டியவர்கள், கொடுக்க வேண்டியவர்கள் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் பெயர்கள் அதிகம் அந்த கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.
அதுபோல தனது மொத்த குடும்பத்தினருக்கு என எழுதிய கடிதத்தில், தனது மகளின் கல்யாணத்தை அனைவரும் சிறப்பாக நடத்தி கொடுத்தீர்கள். எனது அன்பு உங்கள் அனைவர் மீதும் எப்போதும் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு குடும்பத்தினர் யாரும் அதில் சம்பந்தப்பட்ட நபர்களை பழிவாங்க நினைக்க வேண்டாம். சட்டம் தன் கடமையை செய்யும் என்று முடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது உடல் கரைசுத்துப்புதூரில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஜெயக்குமார் உடலுக்கு, சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ராஜேஷ் குமார், பிரின்ஸ், ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஜெயக்குமார் உடலுக்கு கிறிஸ்தவ முறைப்படி, இறுதி சடங்குகள் நடைபெற்றது.