Advertisment

கரூரை தக்க வைக்க போராடும் ஜோதிமணி; கள நிலவரம் என்ன?

தமிழகத்திலேயே அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக கரூர் நாடாளுமன்றத் தொகுதி இருக்கின்றது.

author-image
WebDesk
New Update
Jothimani

கரூர் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சிட்டிங் எம்.பி. ஜோதிமணியும், அ.தி.மு.க சார்பில் எல்.தங்கவேல், பா.ஜ.க சார்பில் வி.வி.செந்தில்நாதன், நா.த.க சார்பில் ரெ.கருப்பையா உட்பட 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருசில தினங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கின்றது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர திமுகவை மட்டும் குறிவைத்து தாக்கத்துவங்கியிருக்கும் நிலையில், தட்டுத்தடுமாறாமல் தமது பிரச்சார யுக்தி, களப்பணிகளில் திமுக கூட்டணி எங்கும் முன்னேறிக்கொண்டேயிருப்பதை களப்பணி நமக்கு புரிய வைத்தது.

   

அந்தவகையில், கரூர் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுடன், திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை, திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் சூடுபிடித்திருக்கின்றது பிரச்சாரம்.     

    

காவிரி, நொய்யல், அமராவதி ஆறுகள் பாயும் இப்பகுதியின் முதன்மையான தொழில் விவசாயம்.  வாழை, நெல், கடலை, மலர், கரும்பு சாகுபடி பிரதானம். 

   

விவசாயத்திற்கு அடுத்ததாக கரூர் பகுதியில் ஏராளமான ஜவுளி நிறுவனங்களும் பிரதானம். இந்நிறுவனங்கள் தயாரிக்கும் படுக்கை உறைகள், போர்வைகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. 

   

கரூர் பகுதியில் பேருந்துகளுக்கு, லாரிகளுக்கு பாடி கட்டும் தொழிலும் பிரசித்தி பெற்றது. ப்ரத்யேக சொகுசு வாகனங்களுக்கும் இங்கு மவுசு கூடுதல். கரூரில் தமிழக அரசு நிறுவனமான காகித ஆலை செயல்படுகிறது. கரூரை தலைமையிடமாகக்கொண்டு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்பட்டு தினசரி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் எரிபொருளை அனுப்பி வைக்கிறது.

   

மாட்டுக்கு மட்டுமின்றி முறுக்குக்கும் பெயர் பெற்ற மணப்பாறை இந்தத் தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளது. பசுபதீஸ்வரர்கோயில், பழமைவாய்ந்த பிரம்மேந்திரர் கோயில், திருவித்துவக்கோடு விஷ்ணு ஆலையம், திருசவப்பா ஆற்றிய கரூவூரார் என பல்வேறு சிறப்புகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.

    

மக்களவைத் துணைச் சபாநாயகர் தம்பிதுரை பலமுறை போட்டியிட்ட தொகுதி. திமுகவிலும், சின்னசாமி, கே.சி பழனிசாமி எனப் பிரபலமான வேட்பாளர்களே ஒவ்வொரு முறையும் களம் காண்கின்றனர். திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களையே இந்த பகுதி மக்கள் தேர்வு செய்துள்ளனர். அதிமுக, திமுக என இருகட்சிகளுக்குமே செல்வாக்கு மிக்க தொகுதி இது.    

    

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளாக, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), அரவக்குறிச்சி, வேடச்சந்தூர், மணப்பாறை, விராலிமலை சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாக கரூர் தொகுதி இருக்கின்றது. இந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14,21,494 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 6,89,900-ம், பெண் வாக்காளர்கள் 7,31,502-ம், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 92 பேரும் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருக்கின்றனர்.

   

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் கவுண்டர்கள், நாயக்கர்கள், வானிப செட்டியார்கள், கொங்கு வேளாளர்கள் மற்றும் பட்டியலினத்தவர்களும் வசித்து வருகின்றனர்.

Advertisment

jothimani

   

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிட்டிங் எம்.பி. ஜோதிமணியும், அ.தி.மு.க சார்பில் எல்.தங்கவேல், பா.ஜ.க சார்பில் மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் ரெ.கருப்பையா உட்பட 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

   

தமிழகத்திலேயே அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக கரூர் நாடாளுமன்றத்தொகுதி இருக்கின்றது. இந்த  நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகள், 4 மாவட்டங்களில் உள்ளதால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

   

இந்தத் தொகுதியில் சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் ஜோதிமணி கடும் நெருக்கடிகளுக்கிடையே மீண்டும் போட்டியிட போராடி சீட் பெற்றார்.  இவருக்கு கரூர் எம்.பி.சீட்டு கொடுக்க காங்கிரஸ் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என்றபோதும், அவைகளை கடந்து சீட்டு வாங்கி களத்தில் திமுகவினரை நம்பி பிரச்சாரத்தில் கொடிகட்டிப்பறக்கிறார்.

   

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் இடங்களில் மேம்பாலங்கள் கொண்டு வந்ததாகவும், மக்கள் பிரச்சினைக்காக மக்களவையில் அதிக விவாதங்களில் பங்கேற்றதாகவும் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, திமுக அரசின் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் பலத்துடன் அதிமுகவோடு கடுமையாக மோடிக்கொண்டிருக்கின்றார்.

   

இவருக்கு ஆதரவாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் உதயநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர். கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஜோதிமணிக்கும் வாக்கு சேகரித்து பேசினர்.

   

தொகுதிப் பக்கம் வரவில்லை என சில இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பினாலும், சிலர் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாகக் கூறும் ஜோதிமணி, மக்கள் ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைப்பேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார். 

   

இந்தத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் எல்.தங்கவேல் பிரச்சாரம் செய்யும் இடங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிமுக எம்.பி. தம்பிதுரையின் முயற்சியால் தான் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன என உரிமை கொண்டாடி வருவதுடன், அந்தந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டு, அவற்றை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்து தொகுதியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார்.

   

இவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, நடிகைகள் விந்தியா, காயத்ரி ரகுராம், பாத்திமா, நடிகர் ரவிமரியா உள்ளிட்டோரும் தங்கவேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளனர். இரட்டை இலை பலம், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி களத்தில் இல்லாததால் அது திமுக கூட்டணியான காங்கிரஸ்க்கு பலவீனமாகவும், அதிமுகவுக்கு பலமாகவும் இருப்பதாக கருதி களத்தில் உற்சாகமாக களமாடிக்கொண்டிருக்கின்றார்.

  

பா.ஜ.க வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் பிரச்சாரத்தின்போது,  “400 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற முனைப்பு காட்டி வரும் நிலையில், அந்த 400-ல் இந்தத் தொகுதியும் இடம் பெற்றால் பிரதமர் மோடியிடம் நேரடியாக சந்தித்து கரூர் பிரச்சனைகளுக்கும், புதிய நலத்திட்டங்களுக்கும் உரிமையோடு உதவிகளை கேட்டு திட்டங்களை பெறுவேன். மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்” எனக்கூறி அவரது செல்போனை எண்ணை காட்டி பிரச்சாரம் செய்து வருகிறார்.  

   

கரூர் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மாநிலத் தலைவர் அண்ணாமலை, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்துள்ளனர்.

   

பா.ஜ.க சின்னமான தாமரை என்ற பலத்துடனும், பா.ஜ.க-வின் பிரச்சார யூகங்களாலும், வைட்டமின் "ப" பலத்தாலும் தி.மு.க-அ.தி.மு.க-விடம் மோதிக்கொண்டிருக்கின்றார்.

   

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் ரெ.கருப்பையா கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு வாக்குறுதிகளை அளிப்பதுடன், தன்னை வெற்றி பெறச் செய்தால் நிச்சயம் அவற்றை நிறைவேற்றித் தருவேன் என வாக்குறுதி அளித்து வருகிறார்.

   

கரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் ரெ.கருப்பையா கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். இவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்துள்ளார். 

   

வாக்குச் சேகரிக்க செல்லும் இடங்களில் டீ போடுவது, இஸ்திரி போடுவது, கிரிக்கெட் விளையாடுவது என ஆதரவு திரட்டி வருகிறார். 

   

காங்கிரஸ் சிட்டிங் எம்.பி.ஜோதிமணிக்கு தமது கட்சிக்குள்ளேயே பல்வேறு உள்ளடி வேலைகள் செய்யப்பட்டாலும், திமுகவினரை நம்பி களத்தில் உற்சாகமாக பிரசாரம் செய்துக்கொண்டிருக்கின்றார். கரூரை தன் கைக்குள் வைத்திருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் இருக்கும்போதே ஜோதிமணி ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டாலும் இலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவதையும் பார்க்க முடிகிறது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jothimani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment