Rahul Gandhi Election Campaign Puducherry : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இதில் தமிழக தலைவர்கள் மட்டுமல்லாது தேசிய கட்சி தலைவர்களும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தின் பாரம்பரியம் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தார்.
அடுத்து சில நாட்களில் மீண்டும் தமிழகத்திற்கு வந்த ராகுல்காந்தி திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தொடர் தேர்தல் பிரச்சாரம்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் புதுச்சேரியில் முக்கிய எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்த்தாக தகவல் வெளியானது. மேலும் புதுசையில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் ராகுல்காந்தியின் சுற்றுப்பயணம் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இன்று காலை புதுச்சேரி வந்த ராகுல்காந்திக்கு அமைச்சர்கள்,மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து மீனவ கிராமமான சோலை நகருக்கு சென்ற அவர், அங்கு மீனவப்பெண்களுடன் கலந்துரையாடினார். இப்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று கூறிய அவர் அடுத்த முறை புதுச்சேரிக்கு வரும்போது மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது எப்படி என்பதை பார்பேன் என்று தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/rahul-gandhi2.jpg)
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரிக்கு சென்ற ராகுல்காந்தி கல்லூரி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவரிடம் அவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தி மரணம் பற்றி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, என் தந்தை மரணம் குறித்து "எனக்கு யாரிடமும் கோபமோ வெறுப்போ இல்லை. நான் என் தந்தையை இழந்தேன், அது எனக்கு ஒரு கடினமான நேரம். எனக்கு மிகுந்த வேதனையை உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார். ஆனால் ராகுல்காந்தி இப்படி கூறினாலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 தமிழர்கள் தற்போது விடுதலை பெற முடியாமல் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய அவர், மாநில உரிமைகளை காங்கிரஸ் எப்போதும் பாதுகாக்கும். கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரி அரசை மோடி செயல்பட வில்லை.நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி, புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. மத்திய அரசு கொடுத்த தைரியத்தினால் தான் கிரண்பேடி அதிகாரத்தை கையில் எடுத்தார். புதுச்சேரி மக்களை காப்பாற்ற தர்மயுத்தத்தில் ஈடுபட உள்ளேன். எங்களுக்கு தரும் ஓட்டு, புதுச்சேரி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் என்று தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தியில் இந்த தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மக்களிடம் குறை கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட மீனவ கிராமத்தை சேர்த்த ஒரு பெண்மணி, கடலோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு யாரும் ஆதரவு தெரிவிப்பதில்லை. நாங்கள் இப்படியேதான் இருக்கிறேம். முதல்வர் நாராயண சாமி கூட எங்களை கண்டுகொள்வதில்லை என்று குறை கூறினார். ஆனால் இதனை ராகுல்காந்தியிடம் மொழிபெயர்த்து கூறிய முதல்வர் நாராயணசாமி, தன்மீது கூறப்பட்ட குறைகளை தனது சாதனமாக மொழிபெயர்த்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"