காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தருடன் சேர்ந்து முறைகேடில் ஈடுபட்டதாக பா.ஜ.க அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறார். யாத்திரையின் ஒரு பகுதியாக குளச்சலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்ந்த குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ-வான பிரின்ஸ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தருடன் இணைந்து பதவிகளை விற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் மீது முறைகேடு குற்றம்சாட்டிப் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், தன் மீது முறைகேடு குற்றம் சாட்டிய அண்ணாமலை மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், பிரின்ஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் முறைகேடுச் செய்திருப்பதாக் கூறியிருக்கிறீர்கள். உங்களுக்கு திராணியிருந்தால் நீங்கள் கூறிய குற்றச்சாட்டை நீரூபிக்க முடியுமா?
இல்லையேல், மேலும் அரசியல் சில்லறைத் தனம் செய்யாமல் பதவி விலக தயாரா? சவால்…!” விடுத்துள்ளார்.
மேலும், தன் மீது முறைகேடு குற்றம் சாட்டிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”