முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுவான திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பு காரணமாக இன்று (ஜனவரி 4) உயிரிழந்தார். அவருக்கு வயது 46.
உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மகன் திருமகன் ஈவேரா ஆவார்.
திருமகன் ஈவேரா 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட த,மா.கா வேட்பாளர் யுவராஜாவை விட 8904 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். திருமகன் ஈ.வெ.ரா அனைத்து மக்களிடமும் எவ்வித பாகுபாடு இன்றியும் பழகி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவரது திடீர் மரணம் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லம் முன் காங்கிரஸ் தொண்டர்கள் அதிக அளவு குவிந்துள்ளனர். அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.