காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திங்கள்கிழமை இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019=ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, நீரவ் மோடி, லலித் மோடி… அனைத்து திருடர்களின் பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயரில் முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பி விமர்சனம் செய்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடி என்ற குடும்பப் பெயரை அவதூறு செய்யும் வகையில் பேசியதாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது.
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடைபெற்று வரும் சத்தியாகிரக போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திங்கள்கிழமை (மார்ச் 27) இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கருப்பு உடை அணிந்து வர உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாளை இரவு முழுவதும் சட்டமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"