நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையே சீட் பங்கீடு பேச்சு வார்த்தையின்போது, கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து திமுகவினர் தன்னை வெளியேற சொன்னதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதனால், ஆளும் திமுக, தங்கள் கூட்டணி கட்சியினருடன், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளை பங்கீடு செய்வது குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இடங்கள் பங்கீடு குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள், உயர் மட்ட பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடங்கள் பங்கீடு பேச்சு வார்த்தை கரூர் திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. திமுக அலுவலகத்தில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது, திமுகவினர் தன்னை வெளியேற சொன்னதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி குற்றச்சாட்டு தெரிவித்து கொந்தளித்துள்ளார்.
திமுக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர், ‘உங்க ஆபிசுக்கு வந்து இருக்கேன். எப்படி நீங்க வெளிய போ அப்படினு சொல்லலாம். விருந்துக்கா வந்துருக்கேன்.மரியாதை இல்லாம பேசுறீங்க. நான் என்ன இவங்க வீட்டுக்கா வந்து இருக்கேன். வெளியே போன்னு சொல்றதுக்கு’ என்று கொந்தளித்தார். பின்னர், அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியினர், திமுகவினர் ஜோதிமணி எம்பியை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"