Advertisment

கூவம் ஆறு சீரமைப்பு நிலை என்ன? வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

இது நாள் வரையில் கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதற்காக உறுதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – கார்த்தி சிதம்பரம் ட்வீட்

author-image
WebDesk
New Update
Karti Chidambaram granded bail in Chinese visa case Tamil News

சென்னையில் உள்ள கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதற்காக இது நாள் வரையில் உறுதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். 

Advertisment

சென்னை மாநகராட்சியில் ஆகஸ்ட் மாதத்துக்கான மாநகராட்சி கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கூவம் ஆறு சீரமைப்பு குறித்து பேசிய மேயர் பிரியா ராஜன், ”சென்னை எம்.ஜி.ஆர் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் கால்வாய் பணிகள் தற்போது நெடுஞ்சாலைத் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் அடுத்த 20 நாட்களில் இந்த பணிகள் முடிக்கப்படும். மேலும், மின்சாரத்துறை சார்பாக 200 மீட்டர் தூரத்திற்கு கேபிள் புதைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளும் ஒரு மாதத்தில் நிச்சயம் முடிக்கப்படும். அதேபோல், பக்கிங்காம் கால்வாயில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு தொடந்து கண்காணிக்கப்படும்” என்று கூறினார்

இதனிடையே கூவம் ஆறு சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நொளம்பூர் மண்டல தலைவர் வி.ராஜன் கேள்வி எழுப்பி பேசுகையில், ”1980கள் வரை கூவம் ஆறு சுத்தமாக இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது, நதியை மீட்டெடுக்க சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டார். இப்போது எனது வார்டு உள்ள மதுரவாயல் அருகே கூவம் ஆற்றின் நிலையை வந்து பார்த்து ஆய்வு செய்யுங்கள்” என்றார்.

இதற்கு பதிலளித்த மேயர் பிரியா ராஜன், ”கூவம் நதியை சீரமைக்க, 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில், மாநில அரசுத் துறைகள் 529 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன. கூவம் நதியை மீட்க தொழில்நுட்ப உதவி மற்றும் நிதியை வழங்க அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். கூவம் ஆற்றை நீர்வளத் துறையோடு இணைந்து ரூ.735 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மறுசீரமைக்கிறது. சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சென்னை வந்த போது, கூவம் ஆற்றை அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு மறுசீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

இதனிடையே சென்னையில் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை சீரமைப்பதற்காக, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த அறக்கட்டளைக்கு 2015 -2016 ஆம் ஆண்டு முதல் ரூ.1,479 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, தூர்வாருதல், அகலப்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இந்த அமைப்பு செய்துள்ளது. இந்த இரு ஆறுகளின் கரைகளில் வாழ்ந்த மக்களை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் குடியமர்த்தி உள்ளது. மேலும் ஆறுகளில் கழிவுநீரைக் கொட்டும் குழாய்களை அடைப்பதற்காக மற்றும் சுற்றுச்சுவர், வேலிகளை அடைப்பதற்காக நிதி செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது நாள் வரையில் கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதற்காக உறுதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை இதனை வெளியிட வேண்டும் என்றும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Greater Chennai Corporation Karti Chidambaram Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment